தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… சேலத்தில் ரூ. 75 கோடி வங்கி கடன் மோசடி.. மாணவர்களை பலிகடாவாக்கிய கும்பல்!
Salem Rs.75 Crore Bank Loan Fraud : சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் ஆதார் கார்டுகளை பெற்று தனியார் வங்கியில் ரூ. 75 கோடி கடன் பெற்று மோசடி செய்த பெஸ்ட் எம்பவர்மென்ட் டிரஸ்ட்டை சேர்ந்தவர் மீது ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் ஆதாரை தவறாக பயன்படுத்தி வங்கியில் ரூ.75 கோடி கடன் பெற்று மோசடி நடந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சம்பவத்தன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அந்த புகார் மனுவில் மாணவர்கள் கூறி இருப்பதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெஸ்ட் எம்பவர்மென்ட் டிரஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் எங்களை தொடர்பு கொண்டனர். அப்போது, உங்கள் வங்கி கணக்குகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர். அத்துடன், இந்த பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்தால் ரூ. 1000 கமிஷன் தருவதாக தெரிவித்தனர்.
ரூ.1 லட்சத்துக்கு ரூ.1000 கமிஷன்- வங்கி நோட்டீஸ்
இதனை ஏற்றுக் கொண்ட நாங்கள் அவர்கள் கேட்டவாறு எங்களது ஆதார் அவர்களிடம். அதன்படி, அவர்கள் எங்களது வங்கி கணக்குகளுக்கு ரூ. 1 லட்சம் அனுப்பினர். அந்த பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு மாற்றம் செய்ததை தொடர்ந்து எங்களுக்கு தலா ரூ.1000 கமிஷன் வந்தது. இந்த நிலையில், தனியார் வங்கியில் இருந்து எங்கள் அனைவருக்கும் பரபரப்பு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்த நோட்டீசை பெற்ற நாங்கள் அதில் படித்து பார்த்தபோது கடும் அதிர்ச்சியில் உறைந்தோம்.
மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து இழுத்த இளைஞர்.. கடலூரில் பெரும் பரபரப்பு.. 3 பேர் அதிரடி கைது!




மாடு வாங்க கடன் பெற்ற 7500 பேர்
ஏனெனில், தனியார் வங்கி அனுப்பிய நோட்டீஸில் மாடு வாங்குவதற்கு கடன் பெற்ற தவணையை செலுத்தவில்லை. எனவே, கடன் தவணையை விரைவில் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று விசாரித்ததில், பெஸ்ட் எம்பவர்மென்ட் டிரஸ்ட் என்ற அமைப்பு மூலமாக மாடு வாங்க கடன் பெற்றுள்ளீர்கள். உங்களைப் போல, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுமார் 7,500 பேர் வங்கி கடன் பெற்றுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
பெஸ்ட் எம்பவர்மென்ட் டிரஸ்ட் மீது நடவடிக்கை தேவை
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெஸ்ட் எம்பவர்மென்ட் டிரஸ்ட் அமைப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட இந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு வழக்கறிஞர் ஒருவர் துணையாக இருந்து வருகிறார். எனவே, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சென்னை மக்கள் கவனத்துக்கு… 5 நாளுக்கு ஆதம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!