செஞ்சி சிறுமி வழக்கில் ஒரு மாதமாகியும் நகராத விசாரணை… களமிறங்கும் டிஐஜி – தொடங்கிய இடத்திலேயே நிற்கும் வழக்கு
Gingee Missing Girl Case : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கடந்த அக்டோபர் 11, 2026 அன்று தனது வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு 20 நாட்களான நிலையில் விசாரணையில் முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.
விழுப்புரம், நவம்பர் 11 : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கடந்த அக்டோபர் 11, 2026 அன்று தனது வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், துப்பு துலங்காத காரணத்தால் வழக்கு சிபிசிஐடி (CBCID) போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் சிறுமி வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சிபிசிஐடி போலீஸார் விசாரணையும் தொடங்கப்பட்டு 20 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.செஞ்சி அருகே சிறுமி மாயமாகி ஒரு மாத காலம் ஆகும் நிலையில், எந்த தடயமும் கிடைக்காததால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினரிடம் மீண்டும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நவம்பர் 11, 2026 இன்று நேரில் விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : தமிழக அரசின் ரூ. 22.30 கோடி நிதி திருட்டு – ஒரே நிறுவனத்துக்கு பலமுறை பணம் அனுப்பப்பட்டது கண்டுபிடிப்பு




சிறுமி காணமல் போனது குறித்து தீவிர விசாரணை
இதனிடையே, சிறுமி காணாமல் போன நாளில் அந்தப் பகுதியில் உள்ள 2 செல்போன் டவர்களில் பதிவான செல்போன் அழைப்புகளை மேற்கொண்ட சுமார் 600 பேரிடமும், சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், நாமக்கல்லில் சிறுமி இருந்ததாக தகவல் வெளியான நிலையில் தனிப்படை அங்கு விரைந்திருந்தது. ஆனால், தற்போது வரை சிறுமி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க : சாதிய மோதல் ஏற்பட வாய்ப்பு… கமல்ஹாசனின் சண்டியர் பட தலைப்புக்கு எதிராக காவல்துறையிடம் புகார்
இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பதிவில், செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் அந்தச் சிறுமி மீட்கப்படவில்லை. அதற்குள், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இன்னொரு சிறுமியைக் கடத்த முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆறு மாதங்களாகியும் சிறிதும் பொறுப்பில்லாத இந்த தவெக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், இப்போது குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளது. காணாமல் போன சிறுமியை இன்னும் மீட்க முடியாமல், இந்த தவெக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி., விக்ரமன் இந்த வழக்கு தொடர்பாக செஞ்சி ஆலம்பூண்டிக்கே வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்த உள்ளதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.