அறியா பருவ காதலால் வந்த வினை..செங்கல்பட்டில் 10 வார கருவை சுமந்த சிறுமி..பெற்றோரின் தவறால் அடுத்து நிகழ்ந்த விபரீதம்!
Chengalpattu Girl Died: செங்கல்பட்டில் இளைஞருடன் ஏற்பட்ட காதலால் கர்ப்பமான 15 வயது சிறுமி 10 வார கர்ப்பமான நிலையில், வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில், அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சிறுமிக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே, சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 10 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த சிறுமியிடம் இது குறித்து கேட்டனர். அப்போது, அந்த சிறுமியின் வீட்டின் அருகே உள்ள இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமானதாகவும், இதுகுறித்த முழுவிவரம் தனக்கு தெரியாது எனவும் அந்த சிறுமி பதில் அளித்துள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என பயந்து சிறுமிக்கு வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதில், அந்த சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு
உடனே, அந்த சிறுமியை பெற்றோர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதாக கூறி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: மின் இணைப்பு வழங்க வினோத லஞ்சம்…இளநிலை பொறியாளருக்கு ஆட்சியர் அடித்த ஆப்பு!




சிறுமி கர்ப்பம் குறித்து போலீசாருக்கு தகவல் இல்லை
சிறுமி கர்ப்பமானது கடந்த ஜனவரி 4-ஆம் தேதி பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் இது தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகமும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையும் போலீசாருக்கு உரிய தகவல் தெரிவிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட பின்னரே, இது குறித்து போலீசாருக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
15 நாள்களாக உயிருக்கு போராடிய சிறுமி
சிறுமி கர்ப்பமானது குறித்து காவல்துறையினருக்கு உரிய தகவல் அளிக்கப்பட்டிருந்தால் போலீசார் முறைப்படி விசாரணை நடத்தி இருப்பதுடன், சிறுமிக்கு உரிய மருத்துவ பாதுகாப்பும் கிடைத்திருக்கும். தற்போது, கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த சிறுமி தற்போது பரிதாபமாக பலியாகி உள்ளார். பள்ளி படிக்கும் இந்த சிறுமி கர்ப்பமாகி உயிரிழந்தது உறவினர்கள் மத்தியிலும், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பெரம்பலூரில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்…4 பெண்கள் பலியான சோகம்…அதிகாலையில் கொடூர விபத்து!