பெரம்பலூரில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்…4 பெண்கள் பலியான சோகம்…அதிகாலையில் கொடூர விபத்து!
Perambalur Accident: பெரம்பலூர் மாவட்டத்தில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததில், கடலூர் மற்றும் சேலத்தைச் சேர்ந்த 4 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு பெண் பக்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் தற்போது, முருகன் கோயில், அம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி, கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள சோழன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த சுமார் 50- க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாத யாத்திரையாக தங்களது ஊரில் இருந்து நேற்று முன்தினம் (ஜனவரி 29- ஆம் தேதி) புறப்பட்டனர். இவர்களுடன் சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த பக்தர்களும் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்றனர். இவர்கள் அனைவரும் இன்று சனிக்கிழமை ( ஜனவரி 31) அதிகாலை சுமார் 5 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்
அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென அந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்களின் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில், பயங்கர வேகத்தில் கார் மோதியதில், பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த கொடூர விபத்தில் கடலூர் மாவட்டம், சோழர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி, சசிகலா, மலர்க்கொடி ஆகிய 3 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படிக்க: சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!




பலி எண்ணிக்கை 4- ஆக உயர்வு
அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் மற்ற பக்தர்கள் விபத்து குறித்து காவல் நிலைத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியானவர்களின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயமடைந்த சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த சித்ரா, ஜோதிலட்சுமி ஆகிய 2 பெண் பக்தர்களும் அவசர ஆம்புலன்ஸ் மூலம் அதே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4- ஆக உயர்ந்தது.
பக்தர்கள் மத்தியில் பெரும் சோகம்
ஜோதிலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கார் ஓட்டுநரான சென்னை, திரிசூலம் பகுதியை சேர்ந்த கௌதம் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்ததுடன், விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். கார் மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தர்களில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் மற்ற பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கண்ணை மறைத்த கள்ளக்காதல்…மாமனாருக்கு தீ வைத்த மருமகள்..பண்ருட்டியில் அரங்கேறிய கொடூரம்!