தைப்பூச திருவிழா..திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்!
Tiruchendur Subramania Swamy Temple: தைப்பூசத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக் கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, அதற்கேற்றவாறு பக்தர்கள் தங்களது தரிசன திட்டமிடுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் தைப்பூச முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில்களில் வருகிற பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதன்படி, ஆறுபடை வீடுகளில் 2- ஆம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலும் தைப்பூசம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், தைப்பூசத்தையொட்டி, இந்த கோயிலில் பூஜை நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்செந்தூர் கோயிலில் உள்ள உற்சவர் சண்முகர் சிலை கடந்த 371 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது, 371- ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் வருகிற ஜனவரி 31- ஆம் தேதி ( சனிக்கிழமை) சண்முகர் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை நேரம் மாற்றம்
இதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 5:00 மணிக்கு மேல் சுவாமி அலை வாயுகந்த பெருமான் வீதி உலா மற்றும் மற்ற கால பூஜைகள் ஆகியவை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 1- ஆம் தேதி) தைப்பூச திருவிழா நடைபெறுவதால், அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8:30 மணிக்கு தீர்த்தவாரி ஆகியவை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: தைப்பூச திருவிழா…பொது மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ஏற்பாடு…நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!




தங்க மயில் வாகனத்தில் எழுந்தரும் சுவாமி
இதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்பட்டு, மாலையில் 5 மணிக்கு சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார். இதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவிலுக்கு செல்கிறார். இதை தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெற உள்ளது. எனவே, தைப்பூசம் அன்றும் (ஞாயிற்றுக்கிழமை), அதற்கு முந்தைய நாளும் (சனிக்கிழமை) கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பூஜை நேரத்தை கணக்கில் கொண்டு அதற்கேற்றவாறு தரிசனத்தை மேற்கொள்ள வேண்டும்.
கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள்
மேலும், இந்த வழிமுறையை பின்பற்றி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருச்செந்தூர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து தைப்பூசத்துக்காக வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதனால், கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும் படிக்க: பெளர்ணமி கிரிவலம்…திருவண்ணாமலைக்கு போறீங்களா…சிறப்பு ரயில் அறிவிப்பு!