பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச கொடியேற்றம்…விண்ணை முட்டிய அரோகரோ கோஷம்!
Palani Dhandayuthapani Temple: திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடி இன்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோயில்களில் 2- ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் இன்று திங்கள் கிழமை ( ஜனவரி 26) கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக் குமார சுவாமி கொடிக்கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், காலை 9:30 மணி அளவில் கொடி ஏற்ற விழா தொடங்கியது. அப்போது, மயில், வேல், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் கொடி மரத்தில் தைப்பூச திருவிழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது, கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்தை எழுப்பி பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.
10 நாள்கள் நடைபெறும் தைப்பூச திருவிழா
விழாவையொட்டி, புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி விதி உலா நடைபெற உள்ளது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் யானை, காமதேனு, தங்கக் குதிரை, வெள்ளி ஆட்டுக் கிடா ஆகிய வாகனங்களில் சுவாமி வீதி உலா வர உள்ளார். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக் குமார சுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு வருகிற ஜனவரி 31- ஆம் தேதி ( சனிக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை வெள்ளி தேரோட்டம் வீதி உலா நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: தைப்பூசம் 2026.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்குது அதிர்ஷ்டயோகம்..




சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்வு
இந்த வீதியுலாவில் முத்துக் குமார சுவாமி மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாளில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்வு மற்றும் மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, 4 வீதிகளில் முத்துக் குமாரசாமி வீதி உலா, பிப்ரவரி 2- ஆம் தேதி ( திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு தங்க குதிரை வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.
தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவு
பிப்ரவரி 3- ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு பெரிய தங்க மயில் வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. பிப்ரவரி 4- ஆம் தேதி ( வியாழக்கிழமை) தெப்பத் தேர் திருவிழா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கொடி இறக்கும் நடைபெற்று தைப்பூச திருவிழா நிறைவடைகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வருகிற ஜனவரி 30- ஆம் தேதி முதல் பிப்ரவரி 3- ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தைப்பூச திருவிழா…பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு..சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!