தைப்பூச திருவிழா…பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு..சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Thaipusam Special Trains: தைப்பூசத் திருவிழாவையொட்டி, மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் எந்த தேதியில் இயக்கப்பட உள்ளது. எந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பன உள்ளிட்ட தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) அனைத்து கோவில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவைகளில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை தர உள்ளனர். இதில், பழனி முருகன் கோயிலிலும் சுவாமி முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதே போல, ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தும், விரதம் இருந்தும் கோயில்களுக்கு நடைபயணமாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தைப்பூச திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்
அதன்படி, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பழனி ரயில் நிலையத்துக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளன. இதில், மதுரை சந்திப்பு- பழனி ( வண்டி எண்: 06145) பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு அதே நாள் காலை 8:30- மணிக்கு பழனி சென்றடையும். இதே போல, மறு மார்க்கமாக பழனி- மதுரை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ( வண்டி எண் 06146) முன்பதிவு செய்யப்படாத சிறப்பு விரைவு ரயில் பிப்ரவரி 1-ஆம் தேதி மதியம் 2:25 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையும்.
மேலும் படிக்க: தைப்பூசம் 2026.. 6 நாட்கள் விரதம் இருப்பது எப்படி? முழு வழிகாட்டி..




சிறப்பு ரயில் நின்று செல்லும் நிலையங்கள்
மதுரை- பழனி இடையிலான இந்த விரைவு சிறப்பு ரயிலானது சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது. எனவே, தைப்பூச திருவிழாவுக்காக பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோயிலில் நாளை திங்கள்கிழமை (ஜனவரி 26) தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து
இந்த திருவிழாவுக்காக வருகிற ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இலவசமாக பொது தரிசன பாதையில் சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம். இதே போல, சுவாமி முருகனை தரிசனம் செய்யும் வழியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தைப்பூசம் 2026.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்குது அதிர்ஷ்டயோகம்..