தைப்பூசம் 2026: முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? எப்போது விரதம் தொடங்க வேண்டும்? முழு விவரம்!!
Thaipusam 2026: விரத காலத்தில் அசைவ உணவுகளை முழுமையாக தவிர்த்து, எளிய சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். மதுபானம், புகைப் பிடித்தல், தீய பழக்கங்களைத் தவிர்த்து, சத்தியம், ஒழுக்கம், கருணை போன்ற நல்லொழுக்கங்களைப் பின்பற்றுவது விரதத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
தமிழர்களின் ஆன்மிக வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள திருநாள்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் கூடும் நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாள், முருகப் பெருமானின் வெற்றியையும், தீமையை அழிக்கும் தெய்வீக சக்தியையும் நினைவுகூரும் நாளாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் முருக பக்தர்கள் இந்த நாளை மிகுந்த பக்தி, விரதம் மற்றும் வழிபாட்டுடன் கொண்டாடுகிறார்கள். 2026 ஆம் ஆண்டில் தைப்பூசம் திருநாள் பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் முருகப் பெருமானுக்காக சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், வேள்விகள், தீர்த்தவாரி மற்றும் காவடி ஊர்வலங்கள் நடைபெறும். குறிப்பாக தமிழ்நாட்டின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இதையும் படிக்க: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு.. கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக விஷயங்கள்!
தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் கடைப்பிடிக்கும் முக்கிய ஆன்மிக நடைமுறைகளில் ஒன்று 48 நாள் விரதம். இந்த விரதம் உடல், மனம் மற்றும் ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு உயரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 2026 தைப்பூசத்தை முன்னிட்டு 48 நாள் விரதத்தை 2025 டிசம்பர் 15, திங்கட்கிழமை முதல் தொடங்க வேண்டும். இந்த நாளிலிருந்து விரதம் கடைப்பிடித்து, தைப்பூசத் திருநாளான பிப்ரவரி 1 அன்று நிறைவு செய்யப்படுகிறது.
விரத நாட்கள்:
48 நாள் விரதம் அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால், பக்தர்கள் தங்கள் வசதி மற்றும் உடல் நிலையைப் பொறுத்து 21 நாள் விரதம் அல்லது 7 நாள் விரதம் கடைப்பிடிப்பதும் வழக்கமாக உள்ளது. 21 நாள் விரதம் தொடங்கிய நாள்: 2026 ஜனவரி 11, 7 நாள் விரதம் தொடங்கும் நாள்: 2026 ஜனவரி 25 ஆகும்.
விரத முறை:
விரத காலத்தில் அசைவ உணவுகளை முழுமையாக தவிர்த்து, எளிய சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். மதுபானம், புகைபிடித்தல், தீய பழக்கங்களைத் தவிர்த்து, சத்தியம், ஒழுக்கம், கருணை போன்ற நல்லொழுக்கங்களைப் பின்பற்றுவது விரதத்தின் முக்கிய அம்சமாகும். தினமும் அதிகாலை எழுந்து குளித்து, முருகன் படத்திற்கு முன் தீபம் ஏற்றி, கந்த சஷ்டி கவசம், சுப்பிரமணிய புஜங்கம், திருமுருகாற்றுப்படை, வேல் விருத்தம் போன்ற துதிகளை பாராயணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
விரதத்தின் நோக்கம்:
விரதத்தின் உண்மையான நோக்கம் வெறும் உணவுக் கட்டுப்பாடு அல்ல; மன அமைதியை அடைவதும், தீய எண்ணங்களை விலக்குவதும், உள்ளார்ந்த மாற்றத்தை அடைவதுமே ஆகும். கோபம், பொறாமை, அகந்தை போன்ற மனக்குறைகளை விலக்கி, பிறரிடம் அன்பும் பொறுமையும் காட்டுவதுதான் இந்த விரதத்தின் உயரிய பயன் என ஆன்மிக அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: விசேஷம் என்றால் பால் காய்ச்சுவது ஏன் தெரியுமா? ஆன்மிகம் தரும் விளக்கம்!
தைப்பூசம் என்பது முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் உள்ள தடைகள் அகன்று, நோய்கள் நீங்கி, மன உறுதி, தைரியம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி கிடைக்கும் புனித காலமாக பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் தான் இந்தத் திருநாள், ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையும், சக்தியும் அளிக்கும் ஒரு ஆன்மிகப் பெருவிழாவாக விளங்குகிறது.