மின் இணைப்பு வழங்க வினோத லஞ்சம்…இளநிலை பொறியாளருக்கு ஆட்சியர் அடித்த ஆப்பு!
Electricity Official Suspended: கன்னியாகுமரியில் மின் இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த மின்துறை இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆட்சியரிடம் அந்த பெண் மனு அளித்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த அந்த அதிகாரி முன்கூட்டியே விடுப்பில் சென்றார்.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமடம் ஆதித்தபுரம் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து அரசு விதிகளுக்கு உட்பட்டு வீடு கட்டி உள்ளேன். புதிதாக கட்டப்பட்ட இந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக தோவாளை மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தேன். அதன்படி, அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஒருவர் (பெயர் வெளியிடவில்லை) என்னை நேரில் அழைத்து புது வீட்டுக்கான மின் இணைப்பு குறித்து பேசி இருந்தார். மேலும், செல்போன் மூலமும் தொடர்பு கொண்டு மின் இணைப்பு தொடர்பாக பேசினார். இந்த நிலையில், என்னை அந்த மின்வாரிய இளநிலை பொறியாளர் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த மின்துறை அதிகாரி
அப்போது, நீங்கள் கட்டிய புது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றால், என்னோடு உல்லாசமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த நான் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது, அவர் எதுவும் பேசாமல் செல்போனை அழைப்பை துண்டித்து விட்டார். எனவே, அந்த மின் வாரிய இளநிலை பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எனது வீட்டுக்கு மின் இணைப்பு கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கண்ணை மறைத்த கள்ளக்காதல்…மாமனாருக்கு தீ வைத்த மருமகள்..பண்ருட்டியில் அரங்கேறிய கொடூரம்!




மின்துறை அதிகாரி பேசிய ஆடியோ
இந்த மனுவுடன் மின்வாரிய பொறியாளர் பேசிய ஆடியோவையும் ஆட்சியரிடம் அந்த பெண் சமர்ப்பித்திருந்தார். இதனை எல்லாம் கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஜவகர் முத்து, மனுதாரரான 35 வயது பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், மின் வாரிய இளநிலை பொறியாளர் அந்த பெண்ணிடம் தவறான எண்ணத்தில் பேசியது உறுதி செய்யப்பட்டது.
மின்துறை இளைநிலை பொறியாளர் சஸ்பெண்ட்
இதைத் தொடர்ந்து, இளநிலை பொறியாளரை சஸ்பெண்ட் செய்து மின் பகிர்மான வட்ட செயற் பொறியாளர் ஜவகர் முத்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த மின் வாரிய இளநிலை பொறியாளர் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அவரிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, துறை ரீதியான விசாரணை நடைபெறும் என்று மின்வாரிய வட்ட செயற்பொறியாளர் ஜவகர் முத்து தெரிவித்தார்.
மேலும் படிக்க: சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோசிப் கட்டாயம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை