AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்: சுகாதாரத் துறை எச்சரிக்கை

Rising Heat in Tamil Nadu: தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என பொதுச் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் கட்டாயம் வெளியே சென்றால் குடை மற்றும் பருத்தி ஆடைகள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்: சுகாதாரத் துறை எச்சரிக்கை
கோப்பு புகைப்படம் Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Mar 2026 14:00 PM IST

தமிழகத்தில் வெப்ப நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் Heat Stroke அல்லது நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் பொதுச் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபாய நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம்

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயில் மிக அதிகமாக இருக்கும் நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் வெளியே செல்லுவது உடல்நலத்திற்கு ஆபத்தானதாகும். குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடல் நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நேரத்தை தவிர்த்து வீட்டிலேயே இருப்பது அவசியம் என பொதுச் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் எச்சரிக்கை

குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் கட்டாய தேவைக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் குடை பயன்படுத்த வேண்டும். உடல் முழுவதும் மறைக்கும் அளவிற்கு பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். இதன் மூலம் நேரடி வெயில் தாக்கத்தை குறைக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு சிறப்பு அறிவுரை

கட்டிட வேலை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் வெயிலில் பணியாற்ற வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் வேலை செய்வது உடலுக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் வேலை நேரங்களில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

ஆடைகள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம்

வெயில் காலங்களில் வெண்மை நிற அல்லது வெளிர் நிறப் பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கும் ஆடைகளையும் கருப்பு நிற ஆடைகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தக்கூடும் என்பதால் இத்தகைய ஆடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

தண்ணீர் மற்றும் உணவுப் பழக்கங்கள்

நாள் ஒன்றுக்கு இரண்டரை லிட்டர் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் ஐந்து லிட்டர் வரை தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இளநீர், பழச்சாறுகள், தர்பூசணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து அதிகமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

உடல்நல அறிகுறிகள் கவனிக்க வேண்டியது அவசியம்

உடலில் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவை வெப்ப தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப பக்கவாதம் அபாயம்

அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்ப பக்கவாதம் (Heat Stroke) மிகவும் ஆபத்தானது. நீர்ச்சத்து குறைபாட்டினால் மயக்கம், வாந்தி, உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் இது சிறுநீரக செயலிழப்பிற்கும் வழிவகுக்கும் என பொதுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதிக வெயிலின் நீண்டகால பாதிப்பு

தொடர்ந்து இரண்டு நாட்கள் அதிகமாக வெயிலில் இருந்தால் Heat Stroke ஏற்பட்டு சிறுநீரக செயலிழக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் Heat Stroke அல்லது நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் பொதுச் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us