காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் விளையாடியபோது பரிதாபம் – பந்து தலையில் பட்டு சிறுவன் உயிரிழப்பு
Cricket Match Tragedy : காஞ்சிபுரத்தில் என்ஜிஓ நகரை சேர்ந்த 11 வயது சிறுவன் சாய் மோதிஷ் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து தலையில் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், ஆகஸ்ட் 29 : காஞ்சிபுரத்தில் என்ஜிஓ நகரை சேர்ந்த 11 வயது சிறுவன் சாய் மோதிஷ் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து தலையில் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மைதானத்தில் பலர் விளையாடிய நிலையில், எங்கிருந்தோ வேகமாக வந்த பந்து சாய் மோதிஷின் தலை மீது விழுந்தது. இதில் மயக்கமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் பந்து தலையில் பட்டு சிறுவன் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே என்ஜிஓ நகர் பகுதியைச் சேர்ந்த சுகிர்தா லட்சுமியின் 11 வயது மகன் சாய் மோதிஷ். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இதையும் படிக்க : “எந்த திட்டமானாலும் விவசாய நிலத்தை எடுத்தாக வேண்டும்”.. அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை.. சிபிஎம் சண்முகம் கடும் கண்டனம்!!




இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 26, 2026 அன்று மிலாது நபி அரசு விடுமுறையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாய் மோதிஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த திடல் மிகப்பெரியது என்பதால் பலரும் அங்கு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து எதிர்பாராதவிதமாக சிறுவன் மோதிஷின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் மோதிஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். இதனையடுத்து அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மோதிஷ், ஆகஸ்ட் 28, 2026 அன்று மதியம் சிகிச்சை பலனின்றி பலியானான். சிறுவனின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை தெரியுமா? அமைச்சர் கொடுத்த அதிரடி FUN கவுண்டர்.. செம வைரல்!
கடந்த சில நாட்களுக்கு முன் தான் விழுப்புரம் சாலைமேடு பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 40 வயது வாலிபர் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அஜிஸ்கானை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதிக வெயிலின் தாக்கம் காரணமாக அவரது மரணம் நிகழ்நிதிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.