“எந்த திட்டமானாலும் விவசாய நிலத்தை எடுத்தாக வேண்டும்”.. அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை.. சிபிஎம் சண்முகம் கடும் கண்டனம்!!
CPIM Shanmugam Condemns Minister: வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தரிசு நிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில் விளைநிலங்களைப் பறிப்பது விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம் என அவர் சாடியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 29: தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்துறை வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான விவாதம் தொடர்ந்து பெரும் அரசியல் புயலைக் கிளப்பி வருகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலங்களை எடுக்காமல் செயல்படுத்த முடியாது என்றும், அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே அவசியம் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது.. பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா.. உயர்நீதிமன்றம் காட்டம்!
அமைச்சர் செங்கோட்டையனின் சர்ச்சை கருத்து:
ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் பேசும்போது, விளைநிலங்களை அழித்து ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துப் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாநிலத்தில் எந்தவொரு உள்கட்டமைப்புத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டுமானாலும் நிலம் தேவைப்படுவதால், விவசாய நிலங்களை எடுத்தாக வேண்டிய சூழல் உள்ளது என்றும் அதற்கு வேறு வழியில்லை என்றும் கூறினார். மேலும், பக்கத்து மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரை விட ஓசூர் பகுதி பொருளாதார ரீதியாகப் பெரும் வளர்ச்சியை அடைய இத்தகைய திட்டங்கள் மிக அவசியம் எனவும், நிலங்களைக் கையகப்படுத்துவது வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனவும் அவர் வாதிட்டார்.
சிபிஎம் சண்முகத்தின் கண்டனம்:
அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏறத்தாழ 50 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் தரிசு நிலங்கள் பயன்பாடின்றி இருக்கும் போது, ஒரு மூத்த வருவாய்த்துறை அமைச்சர் எந்த அடிப்படையில் விவசாய நிலங்களைத்தான் எடுத்தாக வேண்டும் என்று கூறுகிறார் என அவர் கேள்வி எழுப்பினார். முப்போகம் விளையக்கூடிய செழிப்பான வேளாண் நிலங்களை உள்கட்டமைப்புப் பணிகளுக்காக மாற்றுவது, மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியை மிகக் கடுமையாகப் பாதிப்பதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அடியோடு அழித்துவிடும் என்று எச்சரித்தார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் புழல் சிறை ஆய்வு சாதாரணமாக இருந்து விடக்கூடாது… தவாக வேல்முருகன் வலியுறுத்தல்!
தரிசு நிலங்களைக் கண்டறிய கோரிக்கை:
நிலங்கள் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ தரவுகளும் ஆவணங்களும் வருவாய்த்துறையிடம் தான் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய பி. சண்முகம், மாநிலத்தில் எங்கு தரிசு நிலங்கள் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படாத புஞ்சை நிலங்கள் இருக்கின்றன என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டியது அரசின் கடமையாகும் என்றார். அதை விடுத்து, எளிதாக விளைநிலங்களைக் கையகப்படுத்துவோம் என்ற அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான இத்தகைய போக்குகளை மாற்றி, விவசாயத்திற்கு உகந்த நிலங்களைப் பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.