கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கும்போது… துரை தயாநிதிக்கு பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு
Durai Dayanidhi Medical Test : ரூ.256 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் உடல் மற்றும் மன நிலை காரணமாக விசாரணையை எதிர்கொள்ள இயலவில்லை என துரை தயாநிதி சார்பில் நீதிமன்றத்தில் விலக்கு கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, ஆகஸ்ட் 29 : முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துரை தயாநிதிக்கு பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு
ரூ.256 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் உடல் மற்றும் மன நிலை காரணமாக துரை தயாநிதி விசாரணையை எதிர்கொள்ள இயலவில்லை என கூறப்பட்ட நிலையில், கிரிக்கெட் பார்த்தது தொடர்பான வீடியோவை காண்பித்து அமலாக்தத்துறை நீதிமன்றத்தில் தங்களது வாதத்தை முன் வைத்தது. இதனையடுத்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிக்க : “கோயிலுக்கும் திமுகவினருக்கும் என்ன சம்பந்தம்?”.. அறங்காவலர் குழு நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பளார்!




பணமோசடி வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள துரை தயாநிதி பக்கவாதம், ஞாபக மறதியால் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என ஏற்கெனவே அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சேப்பாக்கத்தில் துரை தயாநிதி கிரிக்கெட் போட்டியை பார்த்ததாகவும், தேர்தலில் வாக்களித்ததாகவும் வெளியான காணொளியை சுட்டிக்காட்டி துரை தயாநிதியை மருத்துவப் பரிசோதனை செய்ய சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது
இந்த நிலையில் சிபிஐயின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் துரை தயாநிதியின் உடல் மற்றும் மனநிலையை மீண்டும் பரிசோதிக்க உத்தரவிட்டதோடு, மருத்துவர் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில சட்டவிரோத கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலம்பஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்கள் நாகராஜன் மற்றும்துரை தயாநிதி ஆகியோர் மீது கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதையும் படிக்க : “எந்த திட்டமானாலும் விவசாய நிலத்தை எடுத்தாக வேண்டும்”.. அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை.. சிபிஎம் சண்முகம் கடும் கண்டனம்!!
இந்த வழக்கில் ஒலம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான துரை தயாநிதி மற்றும் நாகராஜன் உள்ளிட்ட பலர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்த வழக்கு கடந்த ஜூன் 13, 2026 அன்று மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது துரை தயாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துரை தயாநீதிக்கு உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் இருப்பதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.