சூர்யா இருக்கார்…. விஜய் முதல்வரானதால் சினிமாவில் வெற்றிடமா? ஆர்ஜே பாலாஜி சொன்ன தகவல்
கருப்பு பட இயக்குநர் ஆர்ஜே பாலாஜி திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நெல்லையில் ரசிகர்களுடன் கருப்பு படம் பார்த்த அவரிடம், விஜய் முதல்வரானதால் தமிழ் சினிமாவில் வெற்றிடம் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள கருப்பு திரைப்படம் கடந்த மே 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் தெலுங்கில் விரபத்ருடு என்ற பெயரில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் முதல்வரானதால் சினிமாவில் வெற்றிடமா?
இந்தப் படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருநெல்வேலி சென்றவர் அங்கு திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்து மகழ்ச்சியடைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருப்பு படம் பார்ட் 2 விரைவில் வரும் என்றார். அவரிடம் விஜய் முதல்வராகவிட்டதால் தமிழ் சினிமாவில் வெற்றிடம் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிக்க : Suriya: ரசிகர்கள் கொண்டாடும் கருப்பு பட கிளைமேக்ஸ்.. எனது உதவியாளர் சொன்ன ஐடியா! – சூர்யா பகிர்ந்த தகவல்!




அதற்கு பதிலளித்த அவர், நான் அப்படி நினைக்கல. விஜய் சார் முதல்வரானதில் மிக மகிழ்ச்சி. ஆனால் சூர்யா சார் மாதிரி மிகப்பெரிய ஸ்டார்ஸ்லாம் இருக்காங்க. இப்போ கூட கருப்பு படத்தை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என நீங்களே பார்க்கிறீர்கள். அதனால் வெற்றிடம் எல்லாம் இல்லை என்றார்.
இந்த நிலையில் மே 23, 2026 நேற்று திண்டுக்கல் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை பேஸின் பிரிட்ஜ் சிக்னலில் இறங்கும்போது மர்ம நபர்கள் சிலர் என்னை கழுத்திலும் வயிற்றிலும் கத்தியை வைத்து என் நகையை அறுத்துக்கொண்டு ஓடினர். காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு நகையைக் கண்டுபிடித்த போதிலும், அதை திரும்ப பெற நீதிமன்றத்துக்கு அலைய வேண்டியிருந்தது. அதை வைத்து தான் கருப்பு படத்தின் அடிப்படை கதை உருவானது என்றார்
கருப்பு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மே 24, 2026 இன்று மதுரையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கருப்பசாமி கோவிலுக்கு கிட்டத்தட்ட 18 அடி உயரம் கொண்ட பெரிய அரிவாளை அவர் காணிக்கையாக அளித்தார்.
இதையும் படிக்க : Karuppu: கருப்பு படத்தில் துரை சிங்கம் என்ட்ரி.. ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி!
கருப்பு படத்தில் சூர்யாவுடன் ஆர்ஜே பாலாஜி, திரிஷா, இந்திரன்ஸ், நட்டி சுப்ரமணியம், அனகா மாயா ரவி, சுவாசிகா, ஷிவதா, ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.