தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் 16ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்.. பட்ஜெட் தாக்கல் எப்போது?
அமைச்சரவைக் கூட்டத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
ஜூலை 14, 2026: தமிழகத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் தனிச் செயல்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாநிலத்தில் அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய், தினசரி ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டங்கள் வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அந்தத் துறையின் செயல்பாடுகள், தற்போதைய நிலை, எதிர்காலத் தேவைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து வருகிறார்.
விரைவில் பட்ஜெட் தாக்கல்:
இந்தச் சூழலில், வரும் ஜூலை 16-ஆம் தேதி முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் தற்போது நடைபெற்று வரும் ஆய்வுக் கூட்டங்களில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் இன்னும் ஏன் அதிவிரைவு சாலைகள் அமைக்கப்படவில்லை என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாலை விபத்துக்களை குறைக்க தனி செயல் திட்டம்:
மேலும், தொழில் வளர்ச்சி, சரக்கு போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விரைவில் தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கான திட்டத்தை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்தாலும், சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், விபத்துகளை குறைக்கும் நோக்கில் தனிச் செயல்திட்டத்தை உருவாக்கி உடனடியாக செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நகர்ப்புற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 10 ஆண்டுகளுக்கான நீண்டகால செயல்திட்டத்தை தயாரிக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.