மம்பட்டியான், பொன்னர் சங்கர் படங்களின் ஒளிப்பதிவாளர் மரணம் – சோகத்தில் திரையுலகம்
Cinematographer Shaji Kumar Passes Away : தமிழில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் பொன்னர் சங்கர், மம்பட்டியான், சாகசம் படங்களின் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். படப்பிடிப்பு தளத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான ஒளிப்பதிவாளராக விளங்கிய ஷாஜி குமார் (Shaji Kumar) காலமானார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் படப்பிடிப்பு தளத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்ததார். இந்த நிலையில் நவம்பர் 9, 2026 நேற்று நள்ளிரவில் கழிப்பறைக்கு செல்லும்போது அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மம்பட்டியான், பொன்னர் சங்கர் படங்களின் ஒளிப்பதிவாளர் மரணம்
மலையாள திரையுலகில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படம் என அறியப்படும் நடிகர் மோகன்லாலின் புலிமுருகன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழில் பிரஷாந்த் நடிப்பில் வெளியான பொன்னர் சங்கர், சாகசம், மம்பட்டியான் உள்ளிட்ட படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளாக மலையாளத் திரையுலகில் அவர் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். பல வெற்றிப் படங்களில் பணியாற்றியிருந்தாலும், திரைப்படங்களின் பட்ஜெட்டை பார்க்காமல், அனைத்துப் படங்களையும் ஒரே அர்ப்பணிப்புடன் அணுகும் ஒளிப்பதிவாளராக திகழ்ந்ததாக கேரள திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : Suriya: மிகவும் வேடிக்கை… சூர்யாவின் சீன் படத்தை பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு!




ஒளிப்பதிவாளர் விபின் மோகனிடம் உதவியாளராகப் பல படங்களில் பணியாற்றி தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஷாஜி குமார், பின்னர் சுதந்திர ஒளிப்பதிவாளராக உயர்ந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியான புலிமுருகன் திரைப்படம் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. மலையாளத்தில் நாரன்*, ஒடியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள ஷாஜி குமார், மோகன்லாலின் சமீபத்திய படைப்புகளில் ஒன்றான அதிமனோஹரம் திரைப்படத்திலும் பணியாற்றியிருந்தார்.
தனித்துவமான காட்சி பாணிக்கு பெயர் பெற்ற ஷாஜி குமார், டிஜிட்டல் திரைப்படத் துறையில் பெரும் வெற்றி கண்டார். பல சமகால ஒளிப்பதிவாளர்கள் இந்தத் துறையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடிய நிலையில், அவர் இதில் சிறந்து விளங்கினார். கடந்த 2001 ஆம் ஆண்டில் வெளியான உத்தமன் திரைப்படத்தின் மூலம் அவர் ஒளிப்பதிவாளராகத் திரையுலகில் நுழைந்தார்.
கலைஞர் கருணாநிதி கதையில் உருவான பொன்னர் சங்கர் படத்துக்கு ஒளிப்பதிவு
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான பொன்னர் சங்கர் படத்துக்கும் ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜன் இயக்கத்தில் அவரது மகன் பிரஷாந்த் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இது மட்டுமல்லாமல் பிரஷாந்த் – ஷாஜி குமார் கூட்டணியில் மம்பட்டியான், சாகசம் போன்ற படங்களும் அடுத்தடுத்து வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : ஓடிடியில் வெளியாகி உள்ள டோரதி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு ஷாஜி குமார் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நவம்பர் 9, 2026 நேற்று நள்ளிரவில், கழிப்பறைக்குச் செல்லும்போது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.