AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட குட்டி யானை – உயிரைக் காக்க முன்வந்த ‘வன்தாரா’ மையம்

மரபணு சார்ந்த எலும்பு கோளாறு காரணமாக எழுந்து நிற்கவோ அல்லது நடக்கவோ முடியாமல் சிரமப்படும் 18 மாத யானைக் குட்டிக்கு, சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகள் முக்கிய முடிவை எடுத்துள்ளனர். சுமார் 125 முதல் 130 கிலோ எடை கொண்ட இந்த யானைக் குட்டி, கேரளாவிலிருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட குட்டி யானை – உயிரைக் காக்க முன்வந்த ‘வன்தாரா’ மையம்
Elephant Calf
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Nov 2026 16:41 PM IST

மரபணு சார்ந்த எலும்பு கோளாறு காரணமாக எழுந்து நிற்கவோ அல்லது நடக்கவோ முடியாமல் சிரமப்படும் 18 மாத யானைக் குட்டிக்கு, சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகள் முக்கிய முடிவை எடுத்துள்ளனர். சுமார் 125 முதல் 130 கிலோ எடை கொண்ட இந்த யானைக் குட்டி, கேரளாவிலிருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இது, ரிலையன்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ‘வன்தாரா’ எனும் விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்திற்கு, மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இடமாற்ற நிகழ்வு 2026 நவம்பர் 6, வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

விமானம் மூலம் வன்தாரா மையம் சென்ற குட்டி யானை

கேரளாவில் உள்ள கோடநாடு யானைகள் பயிற்சி மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த யானைக் குட்டியை இடமாற்றம் செய்வது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்தது. குட்டியால் தானாக எழுந்து நிற்க முடியாத சூழலில், 10 முதல் 12 பேர் கொண்ட குழுவினர், கிரேன் உதவியுடன் அதை மிகவும் கவனமாக, விலங்குகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

அதனைத் தொடர்ந்து, யானைக் குட்டி நெடும்பச்சேரி விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து, கால்நடை நிபுணர்கள் குழுவின் மேற்பார்வையில், பிரத்யேக வாடகை விமானம் மூலம் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ‘வன்தாரா’ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிறப்பிலிருந்தே உடல்நலப் பாதிப்புகள்

இந்த யானைக் குட்டி பிறந்த சில காலத்திலேயே, பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக கோடநாடு மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், ஒருமுறை குட்டி கீழே விழுந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், தீவிர உடல்நலப் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. கால்நடை நிபுணர் குழுவின் உறுதிப்படுத்தலின்படி, அந்த யானைக் குட்டி மரபணு சார்ந்த எலும்பு கோளாறால், குறிப்பாக ‘ஆஸ்டியோபீனியா எனும் பாதிப்பால் அவதிப்படுவது தெரியவந்தது. இந்த நோய் எலும்புகளை பலவீனப்படுத்துவதால், குட்டியால் எழுந்து நிற்கவோ அல்லது நடக்கவோ முடியாமல் போகிறது. *

நான்கு முதல் ஆறு மாத கால சிகிச்சை

 

‘வன்தாரா’அமைப்பில், ஒரு சிறப்பு மருத்துவக் குழு இந்த யானைக் குட்டிக்கு சிகிச்சை அளிக்கும். இதில் ஹார்மோன் சிகிச்சை மற்றும் நீர் சிகிச்சை ஆகியவை அடங்கும். யானைக் குட்டி சிகிச்சைக்கு எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்து, அது முழுமையாகக் குணமடைய நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சைக்குத் தேவைப்படும் முழுச் செலவையும் ‘வன்தாரா’ அமைப்பே ஏற்றுக்கொண்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஒரு பாகன் , சிகிச்சை காலம் முழுவதும் இந்த யானைக் குட்டியுடனேயே தங்கியிருப்பார். மேலும், வனத்துறை அதிகாரிகள் மற்றும் உதவி வன கால்நடை மருத்துவர் ஆகியோர் அவ்வப்போது ‘வன்தாரா’விற்கு வந்து, யானைக் குட்டியின் உடல்நிலையைக் கண்காணிப்பார்கள்.

 

தற்போது தீவிர உடல்நலப் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்த யானைக் குட்டி, முறையான சிகிச்சையாலும் தொடர்ச்சியான பராமரிப்பாலும் மீண்டும் குணமடைந்து, பழையபடி சுயமாக எழுந்து நிற்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது விரைவில் முழுமையாகக் குணமடைந்து ஆரோக்கியத்துடன் மீண்டு வர வேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Follow Us