“திமுகவுக்கு காங்கிரஸ் செய்தது துரோகம்”.. திடீரென கொந்தளித்த வானதி சீனிவாசன்!!
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துப் பேசிய அவர், "இவை அனைத்தும் ஊடகங்களில் உலவும் யூகங்களே. இது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதுவும் தெரியாது" என்று கூறினார். மேலும், இது போன்ற முக்கிய முடிவுகளைத் தேசியத் தலைமைதான் எடுக்கும் என்றார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில தினங்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் தமிழக அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளும், அதற்கு எதிராகத் திராவிடக் கட்சிகள் முன்னெடுக்கும் வியூகங்களும் வியப்பை தருகின்றன. சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட இன்னும் அக்கட்சிக்கு 6 இடங்கள் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தற்போது தவெக பக்கம் சென்று, தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. காங்கிரஸ் இத்தேர்தலில் 5 இடங்களில் வென்றுள்ளது. தொடர்ந்து, விசிக, கம்யூனிஸ்டுகள் ஆதரவை எதிர்நோக்கி விஜய் காத்திருக்கிறார்.
இதையும் படிக்க: அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. ‘வரலாற்றுச் சமரசம்’ ஏற்பட வாய்ப்பு?
தவெக-வின் எழுச்சி மற்றும் மக்களின் தீர்ப்பு:
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இருந்த வாய்ப்புகளில், பெரும்பான்மையான மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன; நாங்களும் மக்களிடம் பேசி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
“திமுக-வுக்கு இழைக்கப்படும் துரோகம்”:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மறுவாழ்வு அளித்ததே திமுக தான் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது திமுக-வுக்குச் செய்யும் துரோகம் என்று விமர்சித்தார் . காங்கிரஸ் தற்போது அதிகாரத்திற்காகவும் பதவி சுகத்திற்காகவும் ஏங்கி இத்தகைய முடிவுகளை எடுப்பதாக அவர் சாடினார்.
ஆளுநரின் நடவடிக்கை குறித்து விளக்கம்:
ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த வானதி சீனிவாசன், “ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படுபவர். சட்டம் என்ன சொல்கிறதோ, என்ன அதிகாரம் இருக்கிறதோ அதைத்தான் அவர் பின்பற்ற முடியும்” என்றார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அதற்கு முன்னதாக ஆளுநர் கேட்கும் ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அந்தந்தக் கட்சியின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திமுக – அதிமுக கூட்டணி யூகங்கள்:
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துப் பேசிய அவர், “இவை அனைத்தும் ஊடகங்களில் உலவும் யூகங்களே. இது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதுவும் தெரியாது” என்று கூறினார். மேலும், இது போன்ற முக்கிய முடிவுகளைத் தேசியத் தலைமைதான் எடுக்கும் என்றும், யூகங்களுக்குத் தன்னால் பதில் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக-வின் எதிர்காலப் பணி:
அரசியல் வெற்றி தோல்விகளைப் பார்த்து பாஜக தனது செயல்பாடுகளைத் தீர்மானிப்பதில்லை என்றும், தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் மக்களுக்கான பணிகளைத் தடையின்றித் தொடர்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிக்க : தவெக ஆட்சியமைப்பதில் தொடரும் சிக்கல் – விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?