AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தவெக வெளியிட்ட வீடியோ போலியானது”.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்”.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

தவெகவினர் வெளியிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் கிளப்பிய தினகரன், "திமிரிலும் வன்மத்துடனும் தவெகவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறி அவர்கள் வெளியிட்ட வீடியோ, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கூட இருக்கலாம்" என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.

“தவெக வெளியிட்ட வீடியோ போலியானது”.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்”.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
டிடிவி தினகரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 09 May 2026 12:36 PM IST

அமமுக எம்எல்ஏ காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறி தவெக வெளியிட்ட வீடியோ, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கூட இருக்கலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, நேற்று மாலை ஆளுநர் அர்லேகரை சந்தித்த டிடிவி தினகரன் அதிரடி புகார் ஒன்றை அளித்தார். அதில், மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தவெக தரப்பில் ஆளுநருக்கு போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ராவணன் சீதையைத் தூக்கியது போல, தவெக மோசடி வேலையில் ஈடுபட்டு எங்கள் எம்எல்ஏவைக் கடத்தப் பார்க்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்க: உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.. அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட த.வெ.க..

நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் பரபரப்பு:

காமராஜ் அதிமுகவை ஆதரிக்கவே கடிதம் கொடுத்துள்ளார். தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தில் உள்ளது அவரது கையெழுத்தே அல்ல. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தினகரன் குற்றம் சாட்டினார். அதோடு, தனது எம்எல்ஏவை காணவில்லை எனவும் ஆளுநரிடம் புகார் அளித்தார். இதனிடையே, மாயமான காமராஜ் நள்ளிரவில் திடீரென ஆளுநர் இல்லம் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து, டிடிவி தினகரனும் ஆளுநர் இல்லம் வருகை தந்தார். இருவரும் ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தனர்.

தவெக வெளியிட்ட வீடியோ:

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநரிடம் தவெக கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது என்றார். அமமுக ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர். ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை. அதோடு, ஒரேயொரு எம்எல்ஏ எங்களிடம் உள்ளார். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தவெக தரப்பில் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர். ஏற்கெனவே, குதிரைப் பேரம் நடந்ததாக டிடிவி தினகரன் கூறிய நிலையில், தவெக தரப்பே வீடியோவை வெளியிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

குதிரை பேரப் புகார்:

இந்நிலையில், சென்னை அடையாறில் இன்று காலை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தவெக தலைவர் விஜய் மீதும் அக்கட்சியினர் மீதும் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார். சர்ச்சை வீடியோ குறித்து பேசிய அவர், “காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் அசல் கடிதம் எங்கே? காரில் அமர்ந்து கையெழுத்திட்டது போன்ற வீடியோவை எடுத்தது யார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

AI தொழில்நுட்பம் குறித்த சந்தேகம்:

தவெகவினர் வெளியிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் கிளப்பிய தினகரன், “திமிரிலும் வன்மத்துடனும் தவெகவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். காமராஜ் கையெழுத்திட்டதாகக் கூறி அவர்கள் வெளியிட்ட வீடியோ, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கூட இருக்கலாம்” என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க : தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்

விஜய் மீது கடும் விமர்சனம்:

தமிழக வெற்றிக் கழகம் தங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகக் குறிப்பிட்ட அவர், “விஜய் 108 தொகுதிகளில் வென்றிருந்தால் எனக்கு என்ன? அவர் எனக்கு மாமனா, மச்சானா? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? விஜய் பெரிய ஹீரோவாக இருக்கலாம், ஆனால் முதல்வர் ஆவதற்காக இது போன்ற மோசடிகளில் ஈடுபடக் கூடாது” என்று காரசாரமாகப் பேசினார். எம்எல்ஏ உண்மையில் ஆதரவு அளித்திருந்தால், அவரை ஏன் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லவில்லை? எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாகப் பொய் பரப்புவது ஏன்? இந்த விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us