மே 9, 2026: தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்து வருகிறது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மூன்று முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், தற்போது வரை ஆளுநர் தரப்பில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை.
இடதுசாரிகளிடம் ஆதரவு கோரிய தவெக:
இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே காங்கிரஸ் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைந்திருக்கக்கூடிய சூழலில், மேலும் ஆதரவளிக்க இடதுசாரி கட்சிகள் முன்வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளன. ஆனால், கூட்டணியில் இல்லை என்றும், திமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றிருக்கும் இரண்டு இடங்கள் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தால், 118 என்ற மெஜாரிட்டி கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விஜயால் ஆட்சி அமைக்க முடியும்.
குதிரை பேரம் பேசும் தவெக – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு:
இதற்கிடையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்த கடிதத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக குறிப்பிட்டு ஆளுநர் மாளிகையில் புகார் அளித்தார். மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும் புகார் அளித்திருந்தார். அதோடு, எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இவரைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை விரைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கடிதம் வழங்கவில்லை என்றும் கூறினார். தன் பெயரில் போலி கடிதம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆதாரத்தை வெளியிட்ட தவெக:
இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்திற்கு போலி கடிதம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்எல்ஏ காமராஜ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்து கையெழுத்திடும் வீடியோவை தமிழக வெற்றி கழகம் வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாக பரவி வருகிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்களின் ஒப்புதலுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கடிதத்தை எழுதவில்லை என்று தகவல் பரவி வருகிறது. இது உண்மைக்கு புறம்பானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
இவை அனைத்தையும் மறைத்துவிட்டு டிடிவி தினகரன் தவறான செய்திகளையும் தகவல்களையும் தெரிவித்து வருகிறார். தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவை இல்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழக வெற்றி கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.