திருச்சியில் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய விஜய்… அந்தோணியார் ஆலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை!
Tvk Leader vijay Latest Speech: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள அந்தோணியார் ஆலையத்தில் விஜய் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு தொகுதிகள் வாரியாக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, தவெக தலைவர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 19) திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது, திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் விஜய் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, தென்றல் நகர், பேருந்து நிலையம், கே. கே. நகர், காஜாமலை சாலை, தமிழ்நாடு ஹோட்டல், இ. வி. ஆர். கல்லூரி சாலை, கொட்டப்பட்டு பகுதி, கோழி பண்ணை சாலை ஆகிய பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் சென்றபடி விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது, விஜய் திடீரென பிரசாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள அந்தோனியார் ஆலயத்தின் உள்ளே சென்றார். அங்கு விஜய் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்.
அந்தோணியார் ஆலையத்தில் மண்யிட்டு பிரார்த்தனை செய்த விஜய்
மேலும், சிறிது தூரம் மண்டியிட்ட வாரே முன்னேறி சென்றார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விஜய் தீவிரப் பிரார்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இன்று காலை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அந்தோணியார் தேவாலயத்தின் பாதிரியாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதே போல, அருகில் உள்ள இந்து கோவிலிலும் பொதுச் செயலாளர் என். ஆனந்த் இன்று காலை சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து, விஜய் ரோடு ஷோவை முடித்து விட்டு சென்னை புறப்பட்டு சென்றார்.
மேலும் படிக்க: “ஷூட்டிங் போயிட்டு வந்து உடனே எம்.எல்.ஏ ஆகிடுவீங்களா?”.. சுந்தர் சி-யை வறுத்தெடுத்த பிரகாஷ் ராஜ்!




இறுதி கட்டத்தை எட்டிய தேர்தல் பிரசாரம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வருகிற 21- ஆம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. இதனால், பிரச்சாரத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிடக்கூடிய பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வீடு, வீடாக நேரில் சென்று வாக்கு சேகரித்து இருந்தார். இதைத் தொடர்ந்து, இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டு வாக்குகளை சேகரித்துள்ளார்.
சென்னையில் 21- ஆம் தேதியுடன் விஜய் பிரசாரம் நிறைவு
நாளை மறுநாள் ஏப்ரல் 21- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதுடன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், வாக்குப்பதிவு நாளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “மகனை முதல்வராக்கவே ஸ்டாலின் உழைக்கிறார்”.. ஈரோட்டில் அமித் ஷா வைத்த ‘வாரிசு’ அரசியல் விமர்சனம்!!