“மகனை முதல்வராக்கவே ஸ்டாலின் உழைக்கிறார்”.. ஈரோட்டில் அமித் ஷா வைத்த ‘வாரிசு’ அரசியல் விமர்சனம்!!
Tamilnadu Assembly Election: தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பெருமைகளை மத்திய பாஜக அரசு எப்போதும் போற்றும் என்று குறிப்பிட்ட அவர், "தமிழகம் இழந்த பெருமைகளை மீட்கவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறினார்.
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் தேர்தல் பரப்புரைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் உச்சகட்ட அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஒரேநாளில் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.கிருத்திகாவை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிரம்மாண்ட ரோடு ஷோ மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சிவகிரி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..
வாரிசு அரசியல் குறித்த கடும் விமர்சனம்:
பிரச்சாரத்தின் போது திமுக-வின் குடும்ப அரசியல் குறித்து அமித் ஷா சரமாரியாகக் குற்றம் சாட்டினார். “தமிழகத்தில் கருணாநிதி, அவருக்குப் பிறகு ஸ்டாலின், இப்போது அவரது மகன் உதயநிதி என குடும்ப அரசியல் ஒரு சங்கிலித் தொடராக நீடிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் ஒட்டுமொத்த உழைப்பும், குறிக்கோளும் தனது மகனை முதலமைச்சர் ஆக்குவது மட்டுமே. அவருக்குத் தமிழக மக்களின் நலனை விடத் தனது குடும்பத்தின் நலனே முக்கியம்” என்று அவர் பேசினார்.
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் ஊழல் புகார்:
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதற்குக் காரணம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் என்று அமித் ஷா சாடினார். “பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்தச் சட்டத்தை முறியடித்தது இந்த இண்டியா கூட்டணிதான். அதுமட்டுமின்றி, திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல்கள் அனைத்தும் வேரறுக்கப்படும்” என்று அவர் உறுதி அளித்தார்.
தமிழகப் பெருமை மற்றும் ஆன்மீகம்:
தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பெருமைகளை மத்திய பாஜக அரசு எப்போதும் போற்றும் என்று குறிப்பிட்ட அவர், “தமிழகம் இழந்த பெருமைகளை மீட்கவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் உலக அளவில் பிரதமர் மோடி கொண்டு சென்று கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் ரோடு ஷோ விவரங்கள்:
சிவகிரி அரசு மருத்துவமனை முதல் தீரன் சின்னமலை சிலை வரை நடைபெற்ற இந்த ரோடு ஷோவில், அமித் ஷா திறந்த வாகனத்தில் நின்று தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, அவர் பயணித்த பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் – எடப்பாடி பழனிசாமி..
ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் பியூஷ் கோயலைத் தொடர்ந்து அமித் ஷாவின் இந்த வருகை, கொங்கு மண்டலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.