வேட்பாளர்களை அறிவிக்காத தேசிய கட்சிகள்.. டெல்லியில் காத்திருக்கும் தமிழக நிர்வாகிகள்!!
Tamilnadu Assembly Election: பாஜகவை பொறுத்தவரை அது தேர்ந்தெடுத்த உத்தேச பட்டியலை கட்சித்தலைமை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறது. இல்லாவிட்டால் ஏற்கனவே வெளியாகி இருக்கும். கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் 2 நாளில் பட்டியல் வெளியாகி விடும் என நேற்று தெரிவித்தார்.
Tamilnadu Polls 2026: வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்? என எதிர்பார்த்து தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காத்துக்கிடக்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி திமுக தரப்பிலும், அதிமுக தரப்பிலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்து விட்டது. தொடர்ந்து கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. ஆனால், தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்று, நாளை என நாட்களை நகர்த்தி வருகின்றன.
இதையும் படிக்க : 4 தொகுதிகளிலும் ‘உதய சூரியன்’ சின்னத்தில் மதிமுக போட்டி.. திடீரென முடிவை மாற்றிய வைகோ!!
வேட்புமனுத் தாக்கலுக்கு 4 நாட்களே உள்ளது:
இதற்கிடையே தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 6ம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் வேட்பாளர் போட்டியில் உள்ள இரு தேசிய கட்சிகளின் பிரமுகர்களும் வேட்பாளர் பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அவர்களது ஆதரவாளர்களும் அடுத்த வேலைக்கு தங்களை தயார்படுத்த ஆயத்தமாகிறார்கள்.




2 நாட்களில் பாஜக வேட்பாளர் பட்டியல்:
பாஜகவை பொறுத்தவரை அது தேர்ந்தெடுத்த உத்தேச பட்டியலை கட்சித்தலைமை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறது. இல்லாவிட்டால் ஏற்கனவே வெளியாகி இருக்கும். கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் 2 நாளில் பட்டியல் வெளியாகி விடும் என நேற்று தெரிவித்தார். எனவே, பட்டியலை இறுதி செய்யும் பணி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்பாளர்களை மறு ஆய்வு செய்யும் காங்.,:
அதேசமயம், காங்கிரஸ் கட்சியும், மாநில தலைமை கொடுத்த பட்டியலை மறு ஆய்வு செய்கிறது. மாநில தலைமை ஏற்கனவே கொடுத்த பட்டியல் மீது ராகுல் காந்தி அதிருப்தி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலை சோனியா காந்தியிடம் காண்பித்து முடிவு எடுப்பதிலும், சோனியா காந்தியின் உடல்நிலையை காரணம் காட்டியும் தயக்கம் காட்டப்படுவதாக தெரிகிறது. ராகுல் காந்தி கேரள தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்ததால் அவர் மூலமும் முடிவு உடனடியாக எடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? வெளியான லோக் போல் கருத்துக்கணிப்பு
டெல்லியில் காத்திருக்கும் நிர்வாகிகள்:
இந்நிலையில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நேற்று இரவும் டெல்லி அக்பர் ரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கலந்தாலோசனை நடைபெற்றது. இதில் தமிழக மேலிடப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பட்டியல் அறிவிக்கப்பட்டு விடாதா? என தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் அங்கே காத்திருந்தனர். இரவு 9.30 மணிக்கு பிறகும் அவர்கள் அங்கிருந்து நகரவில்லை. அதோடு, கட்சி தலைமை முடிவெடுக்க தாமதமாவது குறித்தும் வேதனை தெரிவித்துள்ளனர்.