“ரூட்டை மாற்றும் காங்கிரஸ்”.. விஜய்க்காக ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு!!
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை எட்ட இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில், 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் தற்போது உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக டெல்லியில் இருந்து காங்கிரஸ் மேலிடம் முக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று முதலில் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியது காங்கிரஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு, தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரஸின் ஈடுபாடு அதிகரித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: “தவெக வெளியிட்ட வீடியோ போலியானது”.. AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்”.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
ராகுல் காந்தியின் ‘டி பிளான்’:
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், ஆளுநர் ஆர்லேகர் இதுவரை ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக ராகுல் காந்தி நேரடியாகத் தலையிட்டுள்ளதாகவும், தவெகவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஆளுநர் தொடர்ந்து அழைப்பு விடுக்கத் தாமதப்படுத்தினால், அடுத்தகட்டமாக இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடவும் காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு:
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை எட்ட இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்படுகிறது. இந்த நிலையில், 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நேற்று இணைய வழியாகக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய திருமாவளவன், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்த தனது இறுதி முடிவை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.
தவெக ஆதரவு நிலவரம்:
ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் (கம்யூனிஸ்டுகள்) தலா 2 தொகுதிகள் என மொத்தம் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் நிபந்தனையற்ற ஆதரவைத் தவெகவுக்கு வழங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விசிகவின் முடிவு ஆட்சியமைப்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிக்க : தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்
கடந்த சில நாட்களில் மூன்று முறை ஆளுநரைச் சந்தித்துள்ள விஜய், நேற்று நேரில் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஆளுநர் மாளிகையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் திருமாவளவனின் அறிவிப்புக்காகத் தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறது.