AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசியங்கள்.. டிராக்டரில் வந்த 80 பேர் குடும்பம் முதல் வரவேற்பு அளித்த ரோபோக்கள் வரை..

Tamilnadu Assembly Election: சென்னை தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்த 72 வயதான மனோன்மணி என்ற மூதாட்டி, தனது குடும்பத்தின் மீதான பிணைப்பையும் ஜனநாயகத்தின் மீதான பற்றையும் வெளிப்படுத்தினார். அவர் தனது மகன், பேரன், பேத்திகள் என மொத்தம் 18 வாக்காளர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

தமிழகத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசியங்கள்.. டிராக்டரில் வந்த 80 பேர் குடும்பம் முதல் வரவேற்பு அளித்த ரோபோக்கள் வரை..
டிராக்டரில் வந்த குடும்பம், வரவேற்கும் ரோபோ
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Apr 2026 08:15 AM IST

Tamilnadu Polls 2026: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு, வெறும் அரசியல் நிகழ்வாக மட்டுமல்லாமல், மக்களின் உணர்வுப்பூர்வமான பங்களிப்போடும் நவீனத் தொழில்நுட்பத்தின் வரவோடும் ஒரு பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதில் இடம்பெற்ற சில சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி – எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?

சிவகாசியில் டிராக்டரில் வந்த 80 வாக்காளர்கள்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதிக்குட்பட்ட பூசாரிப்பட்டி கிராமத்தில் ஒரு வியக்கத்தக்கச் சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள சுமார் 150 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரும் கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக டிராக்டரில் வாக்குச்சாவடிக்கு வந்தனர். அந்தக் குடும்பத்தில் வாக்களிக்கத் தகுதியுள்ள 80 பேரும் வரிசையாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

18 உறவினர்களுடன் வந்து வாக்களித்த சென்னை மூதாட்டி:

சென்னை தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்த 72 வயதான மனோன்மணி என்ற மூதாட்டி, தனது குடும்பத்தின் மீதான பிணைப்பையும் ஜனநாயகத்தின் மீதான பற்றையும் வெளிப்படுத்தினார். அவர் தனது மகன், பேரன், பேத்திகள் என மொத்தம் 18 வாக்காளர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். இத்தனை உறவினர்களுடன் வந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

வாக்காளர்களை வரவேற்ற நவீன ரோபோக்கள்:

தேர்தல் ஆணையம் இம்முறை வாக்காளர்களைக் கவரவும் உற்சாகப்படுத்தவும் பல இடங்களில் ரோபோக்களைப் பயன்படுத்தியது. அவ்வாறு, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள நகராட்சிப் பள்ளியில், பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சேலை அணிந்த ரோபோ ஒன்று பணியமர்த்தப்பட்டது. அது வாக்காளர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி அழகிய தமிழில் வரவேற்றது.

அதேபோல், மற்றொரு இடத்தில் வேஷ்டி, துண்டு அணிந்து தமிழ்ப் பண்பாட்டுடன் காட்சியளித்த ஆண் ரோபோ, வாக்காளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு அவர்களுக்குக் கை கொடுத்தும் மகிழ்வித்தது. கோவையில் ‘டீனா’ என்ற ரோபோ வாக்காளர்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தியது.

பசுமை வாக்குச்சாவடியும் தனிமனித உறுதியும்:

புதுக்கோட்டை மச்சுவாடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியைத் தேர்தல் அதிகாரிகள் முழுமையாக ‘பசுமை வாக்குச்சாவடியாக’ மாற்றியிருந்தது பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது.

மேலும் படிக்க : வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையிலும், ஜனநாயகக் கடமையே முக்கியம் எனக் கருதி ஒரு வாக்காளர் மூன்று சக்கர நாற்காலியில் வந்தார். பின்னர் அங்கிருந்து ஒற்றைக் காலில் துள்ளிச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்த அவரது உறுதி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

ஒட்டுமொத்தமாக, தமிழகத்தின் இந்தப் புதிய தேர்தல் வரலாறு மக்களிடையே ஒரு பெரும் எழுச்சியையும், புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us