சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதற்கு சிறப்பு ரயில்.. இரு நாள்கள் இயக்கம்.. முழு விவரம் உள்ளே!
Special Train Operation : தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்ற வாக்காளர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக போத்தனூரில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு இரு நாள்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .
தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றது. முன் எப்போதும் இல்லாமல் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏராளமான வாக்காளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். இதில், ஏராளமான பொதுமக்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் குறித்த நேரத்தில் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமலும், வாக்களிக்க முடியாமலும் போனது. அத்துடன், வாக்காளர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஆகியவை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டன. இருந்தாலும், அதிக அளவிலான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், அனைத்து பொது மக்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சென்னை திரும்புவதற்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
இந்த நிலையில், சென்னையில் இருந்து வாக்களிப்பதற்காக சொந்த ஊர் சென்ற வாக்காளர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்ற வாக்காளர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக நாளை சனிக்கிழமை ( ஏப்ரல் 25) மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26) போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல் – அதிக வாக்குகள் பதிவான டாப் 10 மாவட்டங்கள்




சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் நிலையம்
இந்த சிறப்பு ரயிலானது ஏப்ரல் 25, 26- ஆம் தேதிகளில் காலை 7:40 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக அன்று மாலை 5 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இதே போல, மேற்கண்ட நாட்களில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 4 மணியளவில் போத்தனூர் ரயில் நிலையத்தை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் -பேருந்துகளில் நிரம்பி வழியும் கூட்டம்
தமிழகத்தில் தேர்தல் நேரங்களில் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் ஆகும். அதன் அடிப்படையிலேயே சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், வழக்கத்தை விட இந்த தேர்தலில் அதிக அளவிலான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாகவே பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சிறப்பு பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் படிக்க: 75 ஆண்டுகால சாதனையை முறியடித்த தமிழகம்.. சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குப்பதிவு..