AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“விரக்தியின் விளிம்பில் திமுக”.. அதிமுக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!

Edappadi Palaniswami Condemns: இந்தத் தாக்குதல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, "திமுகவின் ஆட்சி முடியப்போகும் நிலையில், தோல்வி பயம் மற்றும் விரக்தியின் விளிம்பில் அவர்கள் இத்தகைய அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று அவர் சாடியுள்ளார்.

“விரக்தியின் விளிம்பில் திமுக”.. அதிமுக தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Apr 2026 07:35 AM IST

Tamilnadu Polls 2026: தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காகப் பாடுபட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாகப் பொள்ளாச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி ஒன்றிய அதிமுக தொண்டர் மாரிமுத்து என்பவர் மீது, பொள்ளாச்சி ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல் என்பவர் தனது காரை ஏற்றித் தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் போது அதிமுகவின் வெற்றிக்காக மாரிமுத்து தீவிரமாகப் பணியாற்றியதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என அதிமுக தரப்பு குற்றம் சாட்டுகிறது.

இதையும் படிக்க: ராம்குமார் மரண வழக்கு.. 10 ஆண்டு கால சட்டப் போராட்டம் நிறைவு.. உயர்நீதிமன்றம் கூறியது என்ன?

அதிமுக நிர்வாகி மீது கார் ஏற்றி மோதல்:

உடுமலைப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார். அதில், 24.4.2026 அன்று அதிமுக நிர்வாகி மாரிமுத்து, தனது மாற்றுத்திறனாளி மகனைப் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துகொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், தேர்தல் நாளில் தனக்கு எதிராகப் பணியாற்றியதைக் கூறி, மாரிமுத்துவின் வாகனம் மீது தனது காரை ஏற்றியுள்ளார்.

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்:

இந்தத் தாக்குதலில் மாரிமுத்துவும் அவரது மகனும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அருண், ஜெகநாதன் உள்ளிட்ட நால்வர் மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கதிர்வேல், அவரது மனைவி பானுமதி, தந்தை கோபால்சாமி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் இவர்களின் வாகனத்தைச் சேதப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தற்போது மாரிமுத்துவும் அவரது மகனும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் தாக்குதல் சம்பவம்:

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் வாக்குச்சாவடி முகவராக சிறப்பாகச் செயல்பட்ட இதயாத் என்பவர், திமுகவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி பணியாற்றிய ஒரு முகவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தோல்வி பயத்தில் திமுக:

இந்தத் தாக்குதல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, “திமுகவின் ஆட்சி முடியப்போகும் நிலையில், தோல்வி பயம் மற்றும் விரக்தியின் விளிம்பில் அவர்கள் இத்தகைய அடாவடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று அவர் சாடியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதிமுக தொண்டர்களைத் திட்டமிட்டு இலக்கு வைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்தகைய அச்சுறுத்தல்களையும் மீறி கட்சியின் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்குத் தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: இரவில் நண்பர்களுடன் மது விருந்து.. காலையில் ரத்த வெள்ளத்தில் கொலை.. காஞ்சிபுரத்தில் நடுங்க வைக்கும் சம்பவம்!

சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்:

மேலும், இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரை (DGP) அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே மோதல்கள் வெடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us