விருத்தாச்சலம் தொகுதியை குறி வைக்கும் தேமுதிக.. விருகம்பாக்கத்தை இழக்க மறுக்கும் திமுக.. கடும் குழப்பத்தில் பிரேமலதா!
Premalatha Vijayakanth: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட விரும்பும் நிலையில், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால், கடும் குழப்பத்தில் பிரேமலதா இருந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வந்தன. தற்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் தீவிரமாக தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகிறது. இதில், திமுக கூட்டணியில் ஏற்கெனவே அங்கம் வகித்து வரும் கட்சிகள் கூட்டணியை தொடர்வதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டணியில் முதல் முறையாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது. இதற்காக இந்த கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை திமுக தலைமை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது. இது மட்டும் இன்றி தமிழக சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகள் வேண்டுமென்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக தலைமையிடம் பட்டியலையும் சமர்ப்பித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி எது
இந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், பிரேமலதா விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் முதல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி தான் விருதாச்சலம் ஆகும். இதன் காரணமாக, தனக்கும் அந்த தொகுதி வெற்றி வாய்ப்பை தேடி தரும் என்று பிரேமலதா எண்ணுகிறார்.
மேலும் படிக்க: இந்தியா முழுவதும் 260 வந்தே பாரத் ரயில்கள்… படுக்கை வசதியுடன் தயாராகிறது… சென்னை ஐசிஎஃப் வைத்த இலக்கு




விருத்தாசலத்தில் வெற்றிக் கனியை பறித்து விடலாம்
இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வரும் பாமக எம்எல்ஏ சிவகுமார், விருத்தாச்சலம் தொகுதியில் மாறி போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. மயிலம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வெ. சண்முகம் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதனால், விருத்தாச்சலம் தொகுதியில் பாமக போட்டியிட்டால் சுலபமாக வெற்றி வாய்ப்பை பெற்று விடலாம் என்று பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, திமுகவிடம் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியை தேமுதிக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விருகம்பாக்கமா அல்லது விருத்தாசலமா?
இந்த தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது, அந்தக் கட்சியின் வேட்பாளரான பார்த்தசாரதி விருகம்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் இதே தொகுதியில் அவர் போட்டியிட்டால் அதிமுக வேட்பாளராக களம் இறங்க இருக்கும் வி.என்.ரவியை வெற்றி பெறுவது சற்று சிரமம் என்று திமுக கருதுகிறது. இதனால், இந்த தொகுதியில் பிரேமலதா அல்லது அவரது மகன் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை விரும்புகிறது. இதனால், விருகம்பாக்கம், விருத்தாச்சலம் ஆகிய இரு தொகுதிகளில் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்ற குழப்பத்தில் பிரேமலதா விஜயகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கரூர் சம்பவத்தில் காட்டிய வேகம் ஏன விளாத்திகுளம் சம்பவத்தில் காட்டவில்லை – அண்ணாமலை கேள்வி..