கரூர் சம்பவத்தில் காட்டிய வேகம் ஏன விளாத்திகுளம் சம்பவத்தில் காட்டவில்லை – அண்ணாமலை கேள்வி..
கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நேற்றிலிருந்து செந்தில் பாலாஜியின் அட்டூழியம் கரூர் மாவட்டத்தில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி எஸ்.பி. வரை திமுகவிற்கு ஆதரவாக என்னென்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கரூர், மார்ச் 16, 2026: கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் உடற்கூறு ஆய்வு இரவோடு இரவாக முடிக்கப்பட்ட நிலையில், விளாத்திகுளம் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது வரை ஏன் உடற்கூறு ஆய்வு செய்யப்படவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் அரசியல் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜியால் தான் கெட்ட பெயர்:
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நேற்றிலிருந்து செந்தில் பாலாஜியின் அட்டூழியம் கரூர் மாவட்டத்தில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி எஸ்.பி. வரை திமுகவிற்கு ஆதரவாக என்னென்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நாளை சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராக உள்ளார். தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கு கெட்ட பெயர் வருகிறது என்றால் அதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம். தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளில் அவர் சிக்கியுள்ளார்.
மேலும் படிக்க: சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தான் – நீதிமன்றம் சென்றது சரியில்லை – பவன் கல்யாண் பரபரப்பு கருத்து
கரூர் மக்கள் நல்லவர்கள் தான். ஆனால் அந்த ஒருவரின் காரணமாக தொடர்ந்து கரூர் அவப்பெயரில் இருந்து வருகிறது. அதேபோல் நடுநிலையாக செயல்படக்கூடிய அதிகாரிகள் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் நாளை அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டத்தில் காட்டிய வேகம் ஏன் விளாத்திகுளத்தில் இல்லை:
கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இரவோடு இரவாக 41 பேருக்கும் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சம்பவத்தில் மாணவியின் உடற்கூறு ஆய்வு தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை” என தெரிவித்தார்.
மேலும் தவெக உடன் தேசிய ஜனநாயக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பதில் அளித்துள்ளார். அதுவே இறுதி பதிலாக நான் பார்க்கிறேன். தமிழக வெற்றி கழகத்துடன் எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இனி வருங்காலங்களில் நடைபெறுமா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமிதான் பதில் அளிப்பார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.