Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் வாக்குறுதியில் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்..தமிழக மக்களின் பக்கா பிளான்!

Co operative Bank Loan Waiver: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கும் என்பதால், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவதற்காக ஏராளமான பொது மக்கள் குவிந்து வருகின்றனர் .

தேர்தல் வாக்குறுதியில் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்..தமிழக மக்களின் பக்கா பிளான்!
கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Feb 2026 12:06 PM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கமாகும். இந்த அறிவிப்பில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று கூட்டுறவு வங்கியில் பெரும் கடன் தள்ளுபடி செய்யப்படுவது ஆகும். அதன்படி, கடந்த சட்டமன்ற தேர்தல்களின் போது, பொதுமக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு அந்த கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது, கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதே போல, வருகிற சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிறுபான்மையின பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க குவியும் மக்கள்

இதே போல, தேர்தல் அறிக்கைகளை தயார் செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குறுதியிலும் கூட்டுறவு வங்கி கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு கட்டாயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பலர் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குவதற்காக குவிந்துள்ளனர். அதாவது, கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தற்போது 22,500- க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!

கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் வங்கிகள்

இந்த கூட்டுறவு சங்கங்களின் கீழ், 4,474 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், 23-க்கும் மேற்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 1,454 க்கும் மேற்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், பொது மக்களுக்கு நகை கடன், பெண்களுக்கு சுய உதவி குழு கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கி கடன் ரூ.11 ஆயிரம் கோடி அதிகரிப்பு

இதில், கால்நடை வளர்ப்பு, பயிர், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பிரிவுகளில் வழங்கப்படும் கடன்களை குறிப்பிட்ட காலத்தில் அடைத்துவிட்டால் 7 சதவீத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மற்ற வகையிலான கடன்களுக்கு வட்டி 9 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து வருகிறது. அதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.72 ஆயிரம் கோடியாக இருந்த கூட்டுறவு வங்கி கடன் 2025 – ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.83 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.11 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்..பரபரக்கும் அரசியல் களம்!