அதிமுகவின் தொடர் வீழ்ச்சி.. 150லிருந்து 47 இடங்களாகச் சரிவு.. இபிஎஸ்-க்கு வலுக்கும் நெருக்கடி!!
Tamilnadu Assembly Election Result 2026: அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்பட்ட மேற்கு மண்டலத்தில் (கொங்கு மண்டலம்) இந்த முறை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2021-ல் இந்த மண்டலத்தில் 41 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக, இந்த முறை வெறும் 18 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அதிமுக, 2011-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போது மிக மோசமான தேர்தல் முடிவுகளைச் சந்தித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அக்கட்சியின் எதிர்காலம் குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்று சரித்திர வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது அதிமுக வரலாற்றிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களாகக் கருதப்படுகிறது.
இதையும் படிக்க: விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் காங்கிரஸ்?.. கடும் நிபந்தனையுடன் அதிரடி முடிவு..
தொடர் தோல்விகளின் பின்னணி:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2019-ம் ஆண்டு முதல் சந்தித்த நான்கு முக்கியத் தேர்தல்களிலும் அதிமுக பின்னடைவையே சந்தித்து வந்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் (தேனி – ஓ.பி. ரவீந்திரநாத்) மட்டுமே வெற்றி பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகால ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. அதனைத்தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் பூஜ்ஜியம் என்ற நிலையை அடைந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட பல தொகுதிகளில் தோல்வியைத் தழுவி, 47 இடங்களாகச் சுருங்கியுள்ளது.
சரிவுக்கான காரணங்கள் என்னென்ன:
அதிமுகவின் இந்தத் தொடர் வீழ்ச்சிக்குப் பின்வரும் காரணங்கள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருடன் ஏற்பட்ட பிரிவுகள் கட்சியின் வாக்கு வங்கியைச் சிதறடித்தன. பாஜகவுடனான கூட்டணி மற்றும் பின்னர் அதிலிருந்து விலகல் போன்ற முடிவுகள் தொண்டர்களிடையே தெளிவற்ற நிலையை உருவாக்கின.
கோட்டையில் ஏற்பட்ட விரிசல் (மேற்கு மண்டலச் சரிவு):
அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்பட்ட மேற்கு மண்டலத்தில் (கொங்கு மண்டலம்) இந்த முறை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2021-ல் இந்த மண்டலத்தில் 41 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக, இந்த முறை வெறும் 18 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக, மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் போன்றவர்கள் மாற்றுக் கட்சியில் (தவெக) இணைந்தது கட்சிக்கு அந்தப் பகுதியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சிதறிய வாக்குகள் (ஓபிஎஸ் – சசிகலா காரணி):
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு எதிராக, ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தனித்தனியாகவோ அல்லது மற்ற கூட்டணிகளுடனோ களம் கண்டது தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளைப் பிரித்துள்ளது. சசிகலாவின் ஆதரவாளர்கள் சில தொகுதிகளில் அதிமுகவை விட அதிக வாக்குகளைப் பெற்றது, அதிமுகவின் தோல்வியை உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்க: 2026 சட்டமன்றத் தேர்தல் அதிர்வுகள்.. தவெகவின் அதீத எழுச்சி.. பின்னடைவைச் சந்தித்தது திமுகவா.. அதிமுகவா?..
தவெக-வின் அபார எழுச்சி:
புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்தது, அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிடைத்துள்ள இந்த முடிவுகள் அதிமுகவின் தலைமைக்கு மிகப்பெரிய சவாலாகவும், கட்சியை மீண்டும் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.