நொடி பொழுதில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. தீபாவளி பரிசாக வருகிறது இபிஎஃப்ஓ 3.0!
EPFO 3.0 Coming Soon | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு சிறப்பு அம்சங்களை ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில், யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் அம்சத்தை இபிஎஃப்ஓ விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் விரைவாக பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் நோக்கில் தான், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அம்சம் கடந்த சில மாதங்களாக கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான், இபிஎஃப்ஓ 3.0 அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது எப்போது பயன்பாட்டு வரும், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நொடி பொழுதில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம் – சாத்தியமாக்கும் இபிஎஃப்ஓ 3.0
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு அதில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும், தங்களது தேவைகளுக்காக எடுத்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் இபிஎஃப்ஓ தளத்தில் விண்ணப்பித்து வங்கி கணக்கிற்கு பணம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : உங்கள் சம்பளம் உங்கள் சிபில் ஸ்கோரைத் தீர்மானிக்குமா? உண்மை என்ன?




இதற்கு சில நாட்கள் தேவைப்படும். இந்த நிலையில் தான், பிஎஃப் பணத்தை விரைவாக எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் வகையில் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அம்சத்தை இபிஎஃப்ஓ அமைப்பு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இபிஎஃப்ஓ 3.0 – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தின் மூலம் பிஎஃப் பணத்தை மிக விரைவாகவும், சுலபமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். அதாவது, இந்த அம்சம் அமலுக்கு வரும் பட்சத்தில் பிஎஃப் பணத்தை யுபிஐ (UPI – Unified Payment Interface) மற்றும் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மூலம் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்படும். இந்த சூழலில் பிஎஃப் பணத்தை எடுக்க முன்பு போல இணையதளம் மூலம் விண்ணப்பித்து பணம் வங்கி கணக்கிற்கு வரும் வரை காத்திருக்காமல், மிக விரைவாகவே எடுத்துக்கொள்ள முடியும்.