சோழர் கால வரலாற்று செப்பேடுகள் – பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கும் நெதர்லாந்து – அதில் இருப்பது என்ன தெரியுமா?
11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஆனைமங்கலம் செப்பேடுகள் தற்போது இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்க நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலகட்டத்தை சேர்ந்த மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஆனைமங்கலம் செப்பேடுகள் தற்போது இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட உள்ளன. பல ஆண்டுகளாக நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த செப்பேடுகளை, பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்க நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சேப்பேடுகள் தற்போது நெதர்லாந்தில் லெய்டன் பிளேட்ஸ் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவை சோழர் காலக்கட்டத்தை சேர்ந்தது. இது சோழ மன்னர் ராஜராஜ சோழன் காலகட்டமான கி.பி 985 முதல் 1014 இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்தவை என கூறப்படுகிறது. தமிழர் வரலாறு, சோழர் கால கடல் வணிபம், வெளிநாடுகளுடன் தொடர்புகள் ஆகியவற்றை விளக்கும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.
இதையும் படிக்க : விரைவில் நிலவின் மீது மோத உள்ள ராக்கெட்.. என்ன நடக்கும்?.. விஞ்ஞானிகள் கூறும் முக்கிய தகவல்கள்!




இந்த செப்பேடுகளில், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புத்த மடாலயத்திற்கு நில வரி மற்றும் வருவாய் வழங்கப்பட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்த விஹாரத்தை இந்தோனேசியாவை சேர்ந்த ஸ்ரீ மார விஜயோத்துங்க வர்மன் கட்டியதாக கூறப்படுகிறது. சோழர் காலத்தில் தமிழ்நாட்டுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே இருந்த வலுவான கலாச்சார மற்றும் வணிக தொடர்புகளை இது காட்டுவதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மத நல்லிணக்கத்தின் சின்னம்
சோழர்கள் இந்து மன்னர்களாக இருந்தாலும், புத்த கோவிலுக்கு ஆதரவு வழங்கியதை இந்த செப்பேடுகள் உறுதிப்படுத்துகின்றன. இதன் மூலம் இந்தியாவில் பல மதங்கள் இணைந்து வாழ்ந்த பாரம்பரியம் இருந்தது தெரிய வருகிறது.
ஆனைமங்கலம் செப்பேடுகள் மொத்தம் 21 பெரிய மற்றும் 3 சிறிய செம்புத் தகடுகளை கொண்டுள்ளன. சுமார் 30 கிலோ எடை கொண்ட இந்த தகடுகள், சோழ அரச முத்திரையுடன் கூடிய செம்பு வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. ராஜராஜ சோழன் வழங்கிய அரசாணையை, அவரது மகன் ராஜேந்திர சோழன் பின்னர் நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில் செப்பேடுகளில் பொறிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
எப்படி நெதர்லாந்துக்கு சென்றது?
18ஆம் நூற்றாண்டில் டச்சு ஆட்சிக்காலத்தில், நாகப்பட்டினம் டச்சு இந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த காலத்தில் ஃபுளோரென்டியஸ் கேம்பர் என்ற டச்சு அதிகாரி, இந்தியாவில் செயல்பட்ட ஒரு கிறிஸ்தவ மதபோதகரின் மூலம் இந்த செப்பேடுகளை பெற்றதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. பின்னர் கடந்த 1862 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் லைடன் பல்கலைக்கழகத்தில் ஆசிய பிரிவில் இவை பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பல ஆராய்ச்சியாளர்கள் இந்த செப்பு தகட்டில் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கின்றன.
இதையும் படிக்க : ஈரான் போர் மீதான விவாதம்.. பிரிக்ஸ் உலக நாடுகள் இடையே கருத்து வேறுபாடு!
இந்த செப்பேடுகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல ஆண்டுகளாக நெதர்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நெதர்லாந்து அரசு இந்த பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அளிக்கும் முயற்சியை மேற்கொண்டது.
தமிழ் வரலாற்றின் பெருமை
பிரபல தமிழ் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனில் இந்த செப்பேடுகள் குறித்து இடம் பெற்றுள்ளது. இதனால் தமிழ் வரலாற்று ஆய்வாளர்களிடையே இந்த செப்பேடுகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.