AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகத்தின் பயணம்: பாதுகாப்பு, எரிசக்தி, முதலீட்டில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்த ஐக்கிய அரபு அமீரக பயணம், மே 15 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் பிரதமர் மோடியின் ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் தொடக்கமாகும். இந்த பயணம், வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், புதுமை மற்றும் பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் வளைகுடா மற்றும் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகத்தின் பயணம்: பாதுகாப்பு, எரிசக்தி, முதலீட்டில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 May 2026 16:42 PM IST

மே 15, 2026: இந்திய பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் குறுகிய கால பயணம், இந்தியாவுக்கு முக்கியமான மூலோபாய மற்றும் பொருளாதார பலன்களை பெற்றுத் தந்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கடல்சார் கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் நிதி நிறுவனங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து:

இந்த ஒப்பந்தங்கள், பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் முன்னிலையில் அபுதாபியில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இது பிரதமர் மோடியின் ஐந்து நாடுகள் கொண்ட தூதரக சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாகும்.

இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக, “மூலோபாய பாதுகாப்பு கூட்டாண்மை” தொடர்பான புதிய கட்டமைப்பு ஒப்பந்தம் இடம்பெற்றது. இது, பிராந்தியத்தில் நிலவும் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையில், இந்தியா மற்றும் அபுதாபி இடையிலான ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் மேலும் விரிவடைவதை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் படிக்க: தகிக்கும் பாலைவனத்தில் உப்பளத் தொழிலாளர்களின் துயரம்: குஜராத்தின் அவல நிலை

எரிசக்தித் துறையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் “மூலோபாய பெட்ரோலிய கையிருப்பு” தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மேலும், திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) வழங்கும் ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது. இது, இந்தியாவின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விநியோக பல்வகைப்படுத்தல் திட்டங்களுக்கு வலுசேர்க்கும் என கூறப்படுகிறது.

இதன் முக்கியத்துவம் என்ன?

இதனுடன், குஜராத்தின் வடிநாரில் கப்பல் பழுது பார்க்கும் மையத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இது கடல்சார் கட்டமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார ரீதியாக முக்கிய முன்னேற்றமாக, இந்திய உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் RBL Bank, Samman Capital ஆகிய நிறுவனங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் வளர்ச்சியில் முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கையை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.

அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்

அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான்  உடனான பேச்சுவார்த்தையில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களை சமாளிப்பதில் உரையாடலும் தூதரக அணுகுமுறையும் மிகவும் அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

“மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களின் தாக்கம் உலகளவில் உணரப்படுகிறது. இந்தியா எப்போதும் உரையாடலும் தூதரக முயற்சிகளுமே முன்னேற்றத்திற்கான வழி என வலியுறுத்தி வருகிறது,” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதேபோல், ஹார்முஸ் நீரிணை திறந்தும் சுதந்திரமாகவும் இயங்குவது முக்கியம் என அவர் குறிப்பிட்டார். சர்வதேச சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், உலக வர்த்தக பாதைகளில் நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பிராந்திய சவால்களை கையாள்வதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையை பிரதமர் மோடி பாராட்டினார். அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை “குடும்பத்தினரைப் போல” நடத்தி வருவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்தார்.

அபுதாபியுடன் இந்தியாவின் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, “எந்த சூழ்நிலையிலும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துடன் தோளோடு தோள் நின்று செயல்படும்” என்றும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பயணத்திட்டம் என்ன?

இந்த ஐக்கிய அரபு அமீரக பயணம், மே 15 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் பிரதமர் மோடியின் ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் தொடக்கமாகும். இந்த பயணம், வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், புதுமை மற்றும் பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் வளைகுடா மற்றும் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அபுதாபிக்கு பிறகு, பிரதமர் மோடி நெதர்லேண்ட்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு செமிகண்டக்டர்கள், பசுமை ஹைட்ரஜன், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நீர்வள மேலாண்மை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

மேலும், சுவீடன் மற்றும் நார்வே நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு செயற்கை நுண்ணறிவு, பசுமை மாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் வலுவான விநியோக சங்கிலிகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ஒஸ்லோவில் நடைபெறும் மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

Follow Us