ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் 12 வயது சிறுமி சடலம் மீட்பு – கொலை செய்யப்பட்டாரா? துணிக்கடைகளில் விசாரணை தீவிரம்
Girl's Body Found in Yercaud Gorge :சேலம் ஏற்காடு அடுத்த குப்பனூர் மலைப்பாதை வழுக்குப்பாறை அருகே உள்ள பள்ளத்தில் 12 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் அடையாளத்தைக் கண்டறியும் விதமாக, உயிரிழந்த சிறுமி அணிந்திருந்த உடை மற்றும் ஸ்வெட்டர் ஆகியவற்றின் மாதிரிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம், நவம்பர் 28 : சேலம் மாவட்டம் ஏற்காட்டை (Yercaud) அடுத்த குப்பனூர் மலைப்பாதையில் வழுக்குப்பாறை அருகே உள்ள பள்ளத்தில், சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கிடப்பதை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் 12 வயது சிறுமி சடலம் மீட்பு
இந்தச் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், உயிரிழந்த சிறுமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடி மற்றும் குப்பனூர் சோதனைச் சாவடிகளில் போலீசார் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, தீவிர சோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கின்றனர்.
இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை ஆதரவு.. “தீராப்பழி ஏற்படும்”.. திமுக முடிவை மறுபரிசீலனை செய்ய கி.வீரமணி வேண்டுகோள்!!




மேலும், ஏற்காடு பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் தங்கிப் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் தனிப்படை போலீசார் நேரில் சென்று, அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தி விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். சிறுமியின் அடையாளத்தைக் கண்டறியும் விதமாக, உயிரிழந்த சிறுமி அணிந்திருந்த உடை மற்றும் ஸ்வெட்டர் ஆகியவற்றின் மாதிரிகளைக் கொண்டு ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஸ்வெட்டர் எங்கு, எப்போது வாங்கப்பட்டது என்ற கோணத்தில் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், ஏற்காடு நகரம் மற்றும் மலைப்பாதையின் முக்கியச் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் தனிப்படை போலீசார் கைப்பற்றி, சந்தேகத்திற்குரிய வாகனங்கள் மற்றும் நபர்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள போதிலும், சிறுமி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த முழு விவரங்கள் இதுவரை தெரியவராததால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிக்க : “திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்குத் தீபம்”.. நீதியரசர் வைத்தியநாதன் உறுதி!!
இறந்த சிறுமியின் அடையாளத்தை விரைந்து கண்டறியும் வகையில், சிறுமியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்தப் புகைப்படம் அனுப்பப்பட்டு, காணாமல் போன சிறுமிகள் குறித்த புகார்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஏற்காடு காபி தோட்டங்களில் தங்கிப் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளிலும் போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தனிப்படைகளின் விசாரணை முடிவுகள் வெளியான பிறகே இந்தச் சம்பவத்தின் முழுமையான உண்மை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.