ஜன்னல் வழியாக மழைநீர் வீட்டுக்குள் வருகிறதா? சூப்பர் டிப்ஸ்!
Monsoon Home Tips: மழைக்காலத்தில் ஜன்னல் மற்றும் பால்கனி வழியாக மழைநீர் வீட்டிற்குள் வருவதைத் தடுக்க ரப்பர் சீலிங், வாட்டர்ப்ரூஃப் திரைகள் மற்றும் சிலிகான் சீலண்ட் பயன்படுத்தலாம். பால்கனி வடிகால்களை அடிக்கடி சுத்தம் செய்வதுடன், தரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். மேலும், ஜன்னல் ஓர விரிசல்களைச் சரிசெய்து, ஈரமான பகுதிகளை உடனடியாகச் சுத்தம் செய்வதன் மூலம் நீர்க்கசிவு மற்றும் பூஞ்சை பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
மழைக்காலத்தில் ஜன்னலோரம் அமர்ந்து மழையை ரசிப்பது பலருக்கும் பிடித்தமான (Simple Monsoon Hacks) அனுபவம். ஆனால், பலத்த மழையின்போது பால்கனி மற்றும் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் தண்ணீர் புகுவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் வீட்டின் தரை ஈரமாவதுடன், சுவர்களில் நீர்க்கசிவு, பெயிண்ட் உரிதல், பூஞ்சை மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பால்கனி மற்றும் ஜன்னல்களை முறையாகப் பராமரிப்பது அவசியம். மழைநீர் வீட்டிற்குள் வருவதைத் தடுக்க உதவும் சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.
Also Read: பள்ளி செல்லத் தொடங்கியதும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது ஏன்?
1. ஜன்னல்களில் ரப்பர் சீலிங் பொருத்துங்கள்!
ஜன்னல்களின் ஓரங்களில் இருக்கும் சிறிய இடைவெளிகள் வழியாக மழைநீர் வீட்டிற்குள் வரக்கூடும். இதைத் தவிர்க்க ஜன்னல்களின் ஓரங்களில் ரப்பர் கேஸ்கெட் அல்லது வெதர் ஸ்ட்ரிப்பிங் போன்ற சீலிங் பொருட்களைப் பொருத்தலாம். இவை மழைநீர் உள்ளே வருவதைத் தடுப்பதுடன், காற்று மற்றும் தூசி உள்ளே புகுவதையும் குறைக்க உதவும்.
2. பால்கனியில் மழைத்தடுப்புத் திரை அமைக்கலாம்!
பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது பால்கனி வழியாக சாரல் வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க பால்கனியில் பொருத்தமான வாட்டர் ப்ரூஃப் திரைகள் அல்லது தடிமனான பிளாஸ்டிக் திரைகளை அமைக்கலாம். இதன் மூலம் மழைநீர் நேரடியாக வீட்டிற்குள் தெறிப்பதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்.
3. மழைநீர் வடிகால்களைச் சுத்தம் செய்யுங்கள்!
பால்கனியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் வெளியேறும் துளைகள் மற்றும் வடிகால்களில் இலைகள், தூசி உள்ளிட்ட குப்பைகள் அடைத்துக் கொள்ளலாம். இதனால் மழைநீர் வெளியேறாமல் தரையில் தேங்கும். எனவே, மழைக்காலத்திற்கு முன்பே வடிகால்களைச் சுத்தம் செய்து, தண்ணீர் தடையின்றி வெளியேறுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
4. ஜன்னல் ஓரங்களில் உள்ள விரிசல்களைச் சரிசெய்யுங்கள்!
ஜன்னல் சட்டங்கள் மற்றும் சுவர்கள் இணையும் பகுதிகளில் சிறிய விரிசல்கள் இருந்தாலும் மழைநீர் உள்ளே கசிய வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க சிலிகான் சீலண்ட் போன்ற நீர்ப்புகாத பொருட்களைப் பயன்படுத்தி இடைவெளிகளை அடைக்கலாம். பெரிய விரிசல்கள் அல்லது தொடர்ந்து ஏற்படும் நீர்க்கசிவுகள் இருந்தால் கட்டுமான நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
5. பால்கனி தரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
பால்கனி தரையில் மழைநீர் தேங்கினால், அது தரையின் இணைப்புப் பகுதிகள் வழியாக உள்ளே கசியக்கூடும். எனவே, தண்ணீர் வடிகாலை நோக்கிச் செல்லும் வகையில் தரையின் சரிவு அமைந்துள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தரையில் நீண்ட நேரம் தண்ணீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்றுவதுடன், தேவையான இடங்களில் நீர்ப்புகாத பூச்சு அமைக்கலாம்.
6. வாட்டர்ப்ரூஃபிங் பாதுகாப்பு வழங்குங்கள்!
பால்கனி தரை, வெளிப்புறச் சுவர்கள் மற்றும் ஜன்னல் இணைப்புப் பகுதிகளில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க வாட்டர்ப்ரூஃபிங் செய்வது உதவும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நீர்ப்புகாத பூச்சுகளில் விரிசல் அல்லது சேதம் உள்ளதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தப் பராமரிப்புகளை மேற்கொள்வது நல்லது.
Also Read: பள்ளி செல்லத் தொடங்கியதும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது ஏன்?
7. ஜன்னல் திரைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம்!
மழைக்காலத்தில் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு பருத்தி திரைகளைப் பயன்படுத்துவதைவிட, பாலியஸ்டர் அல்லது நைலான் போன்ற விரைவில் உலரக்கூடிய துணிகளால் தயாரிக்கப்பட்ட திரைகளைப் பயன்படுத்தலாம். இவை ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைக்காமல் இருப்பதால் பராமரிப்பதும் எளிதாக இருக்கும்.
8. ஈரமான பகுதிகளை உடனடியாகச் சுத்தம் செய்யுங்கள்!
மழைநீர் வீட்டிற்குள் வந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிடாமல் உடனடியாகத் துடைத்து உலர்த்த வேண்டும். குறிப்பாக ஜன்னல் ஓரங்கள், பால்கனி கதவுகள் மற்றும் தரைப் பகுதிகளில் ஈரம் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் பூஞ்சை வளர்ச்சி, துர்நாற்றம் மற்றும் சுவர்களில் ஈரப்பதம் ஏற்படுவதைக் குறைக்க முடியும்.