தமிழகத்தில் பரவும் பறவை காய்ச்சல்.. கடலூரைத் தொடர்ந்து கோவையிலும் H5N1 வைரஸ் பாதிப்பு! பண்ணைகளில் கோழிகளை அழிக்கும் பணிகள் தீவிரம்..
Bird Flu: கடலூர் மாவட்டத்தின் தட்டியாங்குப்பம், நடுத்திட்டு, தமன்னம்பேட்டை கிராமங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிகளை அழிக்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், 25 ஆயிரம் கோழிகள் இருந்த பண்ணையில் 10 ஆயிரம் மட்டுமே அழிக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெறுகிறது. கோவையிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 28, 2026: தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கோழிகளுக்கு H5N1 வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கோவை மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கோழிப்பண்ணைகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடலூரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்கும் பணி!
கடலூர் மாவட்டத்தின் தட்டியாங்குப்பம், நடுத்திட்டு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நோச்சிக்காடு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவற்றின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆய்வில் H5N1 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பண்ணையில் உள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட கோழிகளை ஆழமான குழிகளில் கிருமிநாசினி பயன்படுத்தி புதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாகவே கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழிக்கப்பட்டும் உள்ளன.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. நிபந்தனைகளுடன் திமுக ஆதரவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
10 ஆயிரம் கோழிகள் மட்டுமே அழிக்கப்பட்டதா? அதிகாரிகள் விசாரணை!
இதற்கிடையே, 25 ஆயிரம் கோழிகள் இருந்த பண்ணையில் சுமார் 10 ஆயிரம் கோழிகள் மட்டுமே அழிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள கோழிகள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பண்ணையிலிருந்து சுமார் 8 ஆயிரம் கோழிகள் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சென்னைக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குழு அமைத்துள்ளார். கோழிகளை சட்டவிரோதமாகக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் மூன்று லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதிகாரிகள் மற்றும் பண்ணை உரிமையாளர்களுக்கு இடையே தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: “இப்படி ஒரு அசிங்கம் மாநிலத்திற்கு தேவையா?”.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இபிஎஸ் காட்டம்!!
கோவையிலும் H5N1 வைரஸ் உறுதி
கடலூரைத் தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை சித்தாபுதூர் அருகே உள்ள பி.கே.ஆர். நகர் பகுதியில் நவம்பர் 18ஆம் தேதி ஓடையின் அருகே 14 நாரை வகை நீர்ப்பறவைகள் உயிரிழந்து கிடந்தன.
இதையடுத்து வனத்துறையினர் அவற்றின் மாதிரிகளைச் சேகரித்து போபாலில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பினர். பரிசோதனையில் ஒரு பறவைக்கு H5N1 வைரஸ் பாதிப்பு இருப்பது நவம்பர் 25ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், பாதிப்பு கண்டறியப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பகுதியில் கோழிப்பண்ணைகளோ, கோழிகள் உயிரிழந்த சம்பவங்களோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கோவையில் தற்போது கோழிப்பண்ணைகளில் கோழிகளை அழிக்கும் நடவடிக்கை தேவையில்லை என்றும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.