AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொகுதி மறுவரையறை ஆதரவு.. “தமிழிக உரிமையை காப்பாற்றியுள்ளோம்”.. மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

MK Stalin Explains DMK Support for Delimitation Bill: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைக் காப்பாற்றியுள்ளதாகவும், உணர்ச்சிவசப்படாமல் தொலைநோக்குப் பார்வையுடன் அணுகியுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மசோதா நகலில் திமுகவின் இரண்டு கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் தயக்கமின்றி ஓங்கிப் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை ஆதரவு.. “தமிழிக உரிமையை காப்பாற்றியுள்ளோம்”.. மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Nov 2026 12:50 PM IST

சென்னை, நவ.28: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உணர்ச்சிவசப்படாமல் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த விஷயத்தை அணுகி இருப்பதாகவும், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டு வரப்படும் போது திமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் எனக் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கான தெளிவான பதிலை இப்போது அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள சூழலில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் போது திமுகவின் நிலைப்பாட்டை எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ஓங்கிச் சொல்ல வேண்டும் என்றும், கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்வதில் எந்தத் தயக்கமும் காட்டக் கூடாது என்றும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். எப்போ வாள் எடுக்க வேண்டும், எப்போ கேடயம் எடுக்க வேண்டும் என்பதை முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி கற்றுக் கொடுத்திருப்பதாகவும், அதற்கேற்ப நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை: “திமுகவின் ஆதரவு நிலைப்பாடு பெரும் அதிர்ச்சியை தருகிறது”.. திருமாவளவன் கவலை!!

முதல் எச்சரிக்கை மணி மற்றும் முந்தைய சட்டமன்றத் தீர்வு:

தொகுதி மறுவரையறை என்ற ஆபத்து வரவுள்ளதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என இந்தியாவிலேயே முதல் முறையாக எச்சரிக்கை மணி அடித்தது திமுகதான் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தியதாகவும், அகில இந்திய அளவிலான தலைவர்களை அழைத்துச் சென்னையில் கூட்டம் நடத்தியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். தற்போது உள்ள தொகுதி எண்ணிக்கையிலேயே தொடரலாம் என விரும்பினாலும், தவிர்க்க முடியாத அரசியல் சாசன விதிப்படி தொகுதிகளை அதிகரிக்கும் போது தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்ற நடைமுறைத் தீர்வை 2024-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மசோதா தோற்கடிப்பு மற்றும் மசோதா நகல்:

கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் காலத்தில் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், ஒருதலைப்பட்சமாக எந்த உறுதியும் அளிக்காமல், படித்துப் பார்க்கக் கூட உரிய கால அவகாசம் தராமல் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்ட மசோதாவை நாடாளுமன்றத்திலேயே தோற்கடித்ததாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பாஜகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்ததாகவும், குரல் எழுப்பாமல் இருந்திருந்தால் மக்கள் தொகை அடிப்படையிலேயே வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்து விட்டு தமிழகத்திற்கான சதவீதத்தைக் குறைத்திருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது மசோதாவின் நகல் கிடைத்துள்ள நிலையில், அதில் திமுக முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளதாகவும், இது மூன்று ஆண்டு காலத் தொடர் வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.. ரூ.2 லட்சம் தருவதாக கூறி 3 இளைஞர்களை அடித்து துன்புறுத்திய சிபிசிஐடி போலீசார்.. பரபரப்பு புகார்!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மாற்றம்:

தற்போது இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்குப் பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை மாற்றி அமைத்திருப்பார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்குப் பேராபத்தாக ஆகிவிட்டிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தனது உரையில் விளக்கியுள்ளார்.

Follow Us