காவிரி போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனங்கள்..
காவிரி விவகாரம் குறித்து உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்கவில்லை என்றும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், திமுக மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
ஆகஸ்ட் 4, 2026: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு இரட்டை அர்த்தத்தில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நடிகை திரிஷாவை ஒப்பிட்டு கருத்தை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்:
காவிரி விவகாரம் குறித்து உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்கவில்லை என்றும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், திமுக மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் “திரிஷா… திரிஷா…” என முழக்கமிட்டனர். இதையடுத்து உதயநிதி சிரித்தபடி, “தண்ணீர் வேறு எங்குப் போனாலும் பரவாயில்லை, அங்கே போய்ச் சேர வேண்டும்” என்று கூறிவிட்டு, பின்னர் “நான் காவிரி தண்ணீரைத்தான் சொன்னேன்” என்று விளக்கம் அளித்தார். இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
மேலும் படிக்க: தவெக அரசின் “பர்ஸ்ட் லுக்” பட்ஜெட்.. மக்களுக்கு காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ் அறிவிப்புகள் என்னென்ன?
அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது:
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ரேவந்த் சரண், இந்தக் கருத்து மிகவும் அருவருப்பானது என்றும், அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தார். மேலும், காவிரி போராட்டம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெறாததால், சமூக வலைதளங்களில் கவனம் பெற இதுபோன்ற மலிவான அரசியலில் திமுக ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து அகந்தையும் நாகரிகமற்ற பேச்சும் திமுகவின் அரசியல் செல்வாக்கை மேலும் பாதிக்கும் என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும் படிக்க: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் மழை… 9 ஆம் தேதி வரை எங்கெல்லாம் மழை இருக்கும் ?
தமிழக பாஜகவும் உதயநிதியின் கருத்தை “அருவருப்பானது, ஆபாசமானது, வெட்கக்கேடானது” என கடுமையாக விமர்சித்தது. மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, உதயநிதியை கைது செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் அது முதலமைச்சர் விஜயின் நம்பகத்தன்மையை உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு:
இந்த சர்ச்சைக்கு மத்தியில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுப்படி தமிழகத்துக்குரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், தமிழகத்துக்குரிய காவிரி நீரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிரச்சினை மீண்டும் தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ள நிலையில், நீர் பகிர்வு விவகாரத்தை கையாளும் விதம் குறித்து எதிர்க்கட்சிகள் தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.