மீண்டும் இரட்டை கொலை சம்பவம்.. துண்டு துண்டான உடல் உறுப்புகள்.. தூக்கத்தில் பிரிந்த உயிர்.. சென்னை அருகே பயங்கரம்!
Chennai Double Murder: சென்னை அருகே திரிசூலத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில், இருவர் பரிதாபமாக வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே உள்ள பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ளது திரிசூலம். இந்தப் பகுதியில் ஏராளமானோர் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இந்த பகுதியில் மணி என்பவரது குடிசை வீட்டில் தங்கி இருந்து வந்தார். இவருடன் 17 வயது சிறுவன் ஒருவரும் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஆறுமுகம் தங்கி இருந்த குடிசை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர் மீதும், அந்த சிறுவன் மீதும் பயங்கர ஆயுதங்களால் கொடூரமான தாக்குதலை நடத்தியது. இதில், கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் மற்றும் அந்த சிறுவன் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். அந்த சிறுவனின் முகம் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டிருந்தது. அவர்களின் விரல்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் துண்டு துண்டாகி கிடந்தது. பின்னர் அந்த கும்பல் அவர்கள் இருவரும் உயிரிழந்ததை உறுதி செய்துவிட்டு தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றது.
விரல் ரேகை நிபுணர்கள் தடயம் சேகரிப்பு
இந்த கொலை சம்பவம் தொடர்பான சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு உடல் கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
மேலும் படிக்க: 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்




தீபக் என்பவரின் வீட்டை அடித்து நொறுக்கிய இருவர்
இதில், கொலையுண்ட ஆறுமுகம் மீது சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் மற்றும் அவருடன் இருந்த சிறுவன் ஆகியோர் பீர்க்கங்காடு பகுதியில் உள்ள தீபக் என்பவர் வீட்டை அடித்து நொறுக்கியதாகவும், அதில் ஏற்பட்ட முன் விரோதம் அல்லது வேறு சம்பவத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
ஜாமீனில் வெளிவந்த நிலையில் கொலை
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆறுமுகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியாகி இருந்த தனது சொந்த ஊரில் தங்காமல் மணலி பகுதியில் தங்கிவிட்டு, திரிசூலம் பகுதியில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், கொலையுண்டவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்தி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் படிக்க: சிவகங்கை கைதி மரண வழக்கு… விசாரணையில் இறங்கும் சிபிசிஐடி!