சிவகங்கை கைதி மரண வழக்கு… விசாரணையில் இறங்கும் சிபிசிஐடி!
Prisoner Akash Death Case: சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் விசாரணையில் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீசார் அடித்து கொன்றதாக கைதியின் உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஆகாஷ் என்ற டெலிஷன் (24 வயது). இவர் உள்பட 3 பேர் சேர்ந்து மானாமதுரை சீயோன் நகரை பகுதியை சேர்ந்த நண்பர்களான ஜெயக்குமார் ( 37 வயது), அழகர் ( 36 வயது) ஆகியோரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆகாஷ் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, ஆகாஷை போலீசார் வாகனத்தில் விசாரணைக்காக அழைத்து சென்றபோது, போலீசாரிடம் இருந்து ஆகாஷ் தப்பிக்க முயற்சி செய்ததாகவும், பாலத்தில் இருந்து குதித்த போது ஆகாசுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. உடனே, அவரை போலீசார் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். இது குறித்து தகவல் அறிந்த ஆகாசின் உறவினர்கள் மானாமதுரை 4 வழிச்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூச்சு திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழப்பு
அப்போது, காவல்துறையின் விசாரணையில் ஆகாஷ் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, தவறி விழுந்ததில் ஆகாசுக்கு காயம் ஏற்பட்டதுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத ஆகாசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: திருச்சியில் இன்று 10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக நிர்வாகிகள் மாநாடு.. முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கும் முதல்வர்..




கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த நிலையில், போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த கைதி ஆகாஷின் மரண வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி வெளியிட்டுள்ளார். கடந்த 2025- ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அஜித் குமாரை போலீசார் கொடூரமான முறையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கையில் 2- ஆவது லாக்அப் டெத்
சிவகங்கை மாவட்டத்தில் போலீசாரின் விசாரணையில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிஐ வசம் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதே மாவட்டத்தில் மீண்டும் போலீசாரின் விசாரணையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தமிழகத்தில் அதிர்வலைகளையும், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சென்னை: வேளச்சேரி–பரங்கிமலை ரயில் சேவை தொடங்குவதில் சிக்கல்