போளூரில் பெருஞ்சோகம்.. கிணறு தோண்டியபோது மண் சரிந்து விபத்து.. இருவர் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழப்பு!
Polur Sand Collapse 2 Died : திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது மணல் சரிந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம், கஸ்தம்பாடி அருகே அமைந்துள்ளது போளூர் கிராமம். இந்த கிராமத்தில், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார். இதில், அதே கிராமத்தை சேர்ந்த செல்வமணி, ரவிச்சந்திரன் உள்பட 3 பேர் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கிணறு வெட்டியதில் கிடைத்த மண்ணை கிணற்றின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேற்கண்ட மூவரும் வழக்கம் போல இன்று வியாழக்கிழமை கிணறு வெட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் சரிந்து விபத்து ஏற்பட்டது. நேற்று திருவண்ணாமலையில் பெய்த மழையின் காரணமாக அந்த மணல் அதிக ஈரப்பதத்துடன் இருந்தது. இந்த மணல் சரிந்ததால் மூன்று தொழிலாளர்களும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
மணல் சரிந்ததில் சிக்கிக் கொண்ட 3 பேர்
இதை அறிந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கிணற்றின் ஆழம் பெரிதாக இருந்த காரணத்தால் அவர்களால் மீட்க முடியவில்லை. இது தொடர்பாக, போளூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலமாக கிணற்றில் உள்ளே தீயணைப்பு வீரர்கள் இறங்கி மூவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: தவெக கூட்டணிக்கு பாமக வந்தால்… விசிக வெளியேறிவிடும்.. கட்சியின் பொருளாளர் தடாலடி!




இருவர் உயிரிழப்பு- ஒருவருக்கு தீவிர சிகிச்சை
இதில், செல்வமணி மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூவரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் அவசர ஆம்புலன்ஸ் மூலமாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்த போது, செல்வமணி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொரு நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இருவரின் சடலங்களையும் போளூர் போலீசார் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போளூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
இது தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கிணறு வெட்டும் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போளூர் கிராமத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மணல் சரிந்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!