திருச்சி அருகே கோர விபத்து.. லாரி – கார் பயங்கர மோதல்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இருவர் மரணம்!
Trichy Car Accident : திருச்சி மாவட்டத்தில் கனரக லாரி மீது கார் மோதிய விபத்தில் அதில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மேலும் 4 பேர் நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் மோகன் குமார். இவர், தனது குடும்பத்தினருடன் வாடகை காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். இந்த காரை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் ( 25 வயது) என்பவர் ஓட்டினார். இந்த காரானது இன்று வியாழக்கிழமை ( அக்டோபர் 1- ஆம் தேதி) திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சியில் இருந்து நத்தம் நோக்கி இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மோகன் குமார் குடும்பத்தினர் என்ற கார் எதிர்பாராத விதமாக ஓட்டுனர் அப்துல் கலாமின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திலேயே இருவர் பலி- 4 பேர் காயம்
இந்த விபத்தில், கார் சிறிது தூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்ட நிலையில், கார் அப்பளம் போல நொறுங்கியது. காரின் உள்ளே பயணித்த மோகன் குமார் ( 70 வயது) மற்றும் அஞ்சனா ( 37 வயது) ஆகியோர் பலத்த ரத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்த சுலேகா ( 61 வயது), ஐஸ்வர்யா ( 28 வயது), வருண் மோகன் ( 38 வயது), 12 சிறுவன் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி நினைத்தாலும் தப்ப முடியாது.. அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்.. குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்!




தீவிர சிகிச்சை பிரிவில் 4 பேர் அனுமதி
தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தது.
இடிபாடுகளில் சிக்கிய சடலங்கள் மீட்பு
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் கருவிகள் உதவியால் சலடங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தஞ்சாவூரில் சத்தமின்றி நடந்த பெரிய ஆபரேஷன்.. கிலாபத் இயக்கத்தில் தொடர்புடைய 6 பேர் கைது.. எஸ்ஐடி குழு அதிரடி!