தஞ்சாவூரில் சத்தமின்றி நடந்த பெரிய ஆபரேஷன்.. கிலாபத் இயக்கத்தில் தொடர்புடைய 6 பேர் கைது.. எஸ்ஐடி குழு அதிரடி!
Thanjavur SIT Arrested 6 Individuals : தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 6 பேரை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நாட்டில் சில இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில், ஒன்றாக கிலாபத் இயக்கமும் இருந்து வருகிறது. இந்த இயக்கத்தில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் அதிரடியாக கைது செய்யப்படுவார்கள். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கீழ்வாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்துக்கு ஆள் சேர்த்து விடுவதாக அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றனர். அதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சார்லஸ் தலைமையில் கடந்த செப்டம்பர் 29- ஆம் தேதி சுமார் 6 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
3 மணி நேர சோதனையில் 6 பேர் கைது
சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், கிலாபத் இயக்கத்தில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தஞ்சாவூர், கீழ்வாசல் பகுதியைச் சேர்ந்த அப்துல் வர்கீஸ், சாஹிர் உசேன், யாசர் அப்துல், உமர் முக்தார், ஷேக் பரீத், சாம்சுதின் ஆகிய 6 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள் மற்றும் பென் டிரைவ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க: அறுந்து விழுந்த உயிர் மின் கம்பி.. துடிதுடித்து பரிதாபமாக பலியான அக்கா – தம்பி.. ராமநாதபுரத்தில் நெஞ்சை பிளக்கும் சோகம்!




கிலாபத் இயக்கத்தில் தொடர்பில் இருந்தது உறுதி
தொடர்ந்து, அவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் குழுவுக்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில், கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேற்கண்ட 6 பேர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கிலாபத் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
இதைத் தொடர்ந்து, சாகிர் உசேன், உமர் முக்தார், அப்துல் வர்கீஸ் உள்ளிட்ட 6 பேர் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்களை தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு மாவட்ட நீதிபதி 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்ததை அடுத்து, அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, இவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: கள்ளக்காதலால் நேர்ந்த கொடூரம்.. சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்.. சென்னையில் கோர சம்பவம்!