அறுந்து விழுந்த உயிர் மின் கம்பி.. துடிதுடித்து பரிதாபமாக பலியான அக்கா – தம்பி.. ராமநாதபுரத்தில் நெஞ்சை பிளக்கும் சோகம்!
Ramanathapuram Electrocution Double Died : ராமநாதபுரத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை தொட்ட சிறுவன், சிறுமி மீ து மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து அக்காள் மற்றும் தம்பி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இங்கு, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிடித்து செல்வது வழக்கம். அதன் படி, இன்று புதன்கிழமை காலை அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி நிறைமதி மற்றும் அவரது தம்பி 6 வயது பிரவீண் ஆகியோர் தண்ணீர் பிடிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மேல் பகுதியில் செல்லும் மின் வயர் எதிர்பாராத விதமாக அருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இதனை, அந்த சிறுவன் தெரியாமல் தோட்ட நிலையில் அவரை மின்சாரம் தாக்கியது.
அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட அக்காள்- தம்பி
இதில், வலி தாங்க முடியாமல் சிறுவன் கத்திய நிலையில், தனது தம்பியை மீட்பதற்காக அக்கா அவரை தொட்ட போது, சிறுமியையும் மின்சாரம் தாக்கியது. இதில், இருவரும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர் இந்த சம்பவத்தை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று சிறுவன் மற்றும் சிறுமியை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
மேலும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்.. ஆயுதப்படை காவலர் திடீர் மரணம்.. சோகத்தில் முடிந்த கதை!
அடுத்தடுத்து உயிரிழந்த அக்காள்- தம்பி
அதன் அடிப்படையில், அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். சடலங்களையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து, இருவரது சடலமும் உடல்கூறாய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குடும்பத்தினர்- கிராம மக்கள் மத்தியில் பெருஞ்சோகம்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, தகவல் அறிந்து வந்த மின்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை சீரமைத்து பாதுகாப்பை உறுதி செய்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள், தம்பி மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி நினைத்தாலும் தப்ப முடியாது.. அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்.. குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்!