தேஜ கூட்டணியில் இருந்து விலகல்.. தவெக கூட்டணியில் பாமக இணைய முடிவு? அமைச்சரவையில் செளமியாவுக்கு இடம்!
PMK Join TVK Alliance : தமிழக இடைத்தேர்தல் முடிவை தொடர்ந்து, தேஜ கூட்டணியில் இருந்து விலகி தவக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் பாமக இணைய இருப்பதாகவும், செளமியாவுக்கு அமைச்சர் பதவி அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், ஒரு எம்எல்ஏ சபாநாயகர் ஆன நிலையில், தவெகவின் பலம் 107- ஆக குறைந்தது. இதனால், தவெக ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி, தவெக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், தவெக கூட்டணியில், இடதுசாரிகள் இடம்பெறவில்லை என்று கூறிவரும் நிலையில், தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலை உள்ளது. இதனால், தமிழகத்தில் நடைபெற உள்ள 7 தொகுதி இடைத்தேர்தல்களிலும் தவெக வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது. அப்படி இருந்தும் மேலும், 4 எம்எல்ஏக்கள் பலம் தேவைப்படுகிறது.
தேஜ கூட்டணியிலிருந்து விலகி தவெக கூட்டணியில் பாமக
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வரும் பாமக அங்கிருந்து விலகி, தவெக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தொடக்கத்தில், தவெக அரசை கடுமையாக விமர்சித்து வந்த பாமக தலைவர் அன்புமணி தற்போது அமைதியான போக்கை கடைபிடிக்க தொடங்கியுள்ளார். இது, தவெக- பாமக கூட்டணியை உறுதி செய்யும் அச்சாரமாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, தவெக அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!




தவெக அமைச்சரவையில் செளமியாவுக்கு வாய்ப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும், இதில், பாமக சட்டமன்ற தலைவர் சௌமியா அன்புமணிக்கு இடம் அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை அல்லது சுற்றுச்சூழல் ஆகிய 3 இலாகாக்களில் ஒன்று அவருக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில், சௌமியாவின் மக்கள் சார்ந்த பேச்சு மெச்சும் படி இருந்தது அனைவரையும் பாராட்டையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், விரைவில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக கூட்டணியில் பாமக இணைவதில் சிக்கல்
இதில், ஒரு சிக்கலும் உள்ளது. என்னவென்றால், தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஏற்கனவே, திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தவெக கூட்டணியில் பாமக இணைவதற்கு அவர் சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, ஜாதிய அடையாளத்துடன் செயல்படும் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என்று கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அன்பில் மகேஸ் கூட்டாளி இடங்களில் சிசிபி திடீர் சோதனை.. 44 ஆவணங்கள்- மடிக்கணினி பறிமுதல்.. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை!