AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தின் மொத்த கடன்.. பட்ஜெட்டுக்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!!

TN Debt 13 Lakh Crore: தற்போதைய சூழலில், அரசு ஈட்டும் சொந்த வரி வருவாயில் பெரும் பகுதி வட்டி செலுத்துவதற்கே சென்றுவிடுகிறது. இதனால், மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த கடன்.. பட்ஜெட்டுக்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Jul 2026 13:58 PM IST

சென்னை, ஜூலை 24: ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதாரப் பாதையை தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, மாநிலத்தின் தற்போதைய கடன் சுமை, வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி மேலாண்மை குறித்த பல்வேறு துறை சார்ந்தத் தகவல்களைத் தொகுத்து வழங்கும் விரிவான செய்தித் தொகுப்பு இதோ.

இதையும் படிக்க: தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!

ஒட்டுமொத்த கடன் சுமை: ரூ.13.18 லட்சம் கோடி

சமீபத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையின்படி, தமிழகத்தின் நேரடி சந்தைக் கடன் ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இருப்பினும், அரசு உத்தரவாதம் அளித்துள்ள பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs), சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் சிறப்பு நோக்க அமைப்புகளின்கடன்களையும் சேர்த்தால், தமிழகத்தின் உண்மையான கடன் சுமை ரூ.13,18,000 கோடியாகும். இதில், முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பங்களிப்பானது, மின்சாரத் துறை: ₹2.46 லட்சம் கோடிக்கும் மேல், போக்குவரத்துக் கழகங்கள் (8 நிறுவனங்கள்): ரூ.43,865 கோடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்: ரூ.27,181 கோடி ஆக உள்ளது.

வரலாறு காணாத வருவாய் பற்றாக்குறை:

2021 ஏப்ரல் 1 அன்று ரூ.5.13 லட்சம் கோடியாக இருந்த நேரடிக் கடன், கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக (GSDP-ல் 2.2%) பதிவாகியுள்ளது. வரும் பட்ஜெட்டில் இது மேலும் அதிகரித்து ரூ.90,500 கோடி வரை உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் கடன் விகிதம் 28.3% என்ற அளவில் உயர்ந்து நிற்கிறது.

அரசு ஈட்டும் சொந்த வரி வருவாயில் சுமார் 35% நிதி பழங்கடன்களுக்கான வட்டி செலுத்தவே செலவிடப்படுகிறது. 2025-26-ல் வட்டிச் செலவு மட்டும் ரூ.67,050 கோடி ஆகும். இது ஆண்டின் மொத்த மூலதனச் செலவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் நிதிப் பகிர்வு:

மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதிப் பகிர்வு குறைந்ததும் ஒரு முக்கியக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. 9-வது நிதிக் குழுவில் 7.9% ஆக இருந்த தமிழகத்திற்கான வரிப் பகிர்வு, 16-வது நிதிக் குழுவில் 4.079% ஆகக் குறைந்துள்ளது. இதனால் மாநிலத்திற்கு ரூ.3.17 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் (ரூ.3,548 கோடி), ஜல் ஜீவன் இயக்கம் (ரூ.3,112 கோடி) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் (ரூ.2,246 கோடி) என சுமார் ரூ.9,500 கோடி நிதி மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. GST இழப்பீடு வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்ததாலும், வரி விகித மாற்றங்களாலும் ஆண்டுக்கு ரூ.9,600 கோடி கூடுதல் இழப்பு ஏற்படுகிறது.

கடந்த கால ஆட்சிகளின் கடன்கள்:

வரலாற்று ரீதியாக, மாநிலக் கடன் உயர்ந்த போதிலும் முந்தைய அரசுகள் முக்கிய இலவச மற்றும் நலத்திட்டங்களை அமல்படுத்தியே வந்துள்ளன. 2011 (அதிமுக ஆட்சி): கடன் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தபோது, இலவச மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் மற்றும் திருமண உதவிக்கு 4 கிராம் தங்கம் திட்டங்கள் தொடங்கப்பட்டன. 2016 (அதிமுக ஆட்சி): கடன் ரூ.2.11 லட்சம் கோடியாக உயர்ந்தபோது, 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் தாலிக்கு தங்கம் 8 கிராமாக உயர்த்தப்பட்டது.

2021 (திமுக ஆட்சி): கடன் ரூ.5.60 லட்சம் கோடியைத் தொட்ட நிலையில், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் (விடியல் பயணம்) மற்றும் ரூ.4,000 கொரோனா நிவாரணம் உடனடியாக வழங்கப்பட்டன.

பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுபவை:

நிதி நெருக்கடி கடுமையாக இருக்கும் சூழலில், வரவிருக்கும் பட்ஜெட்டில் புதிய வருவாய் ஆதாரங்களைப் பெருக்க அரசு சில தீவிர நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைக் கட்டணம் மற்றும் நிலங்களின் வழிகாட்டி மதிப்புகளை மாற்றி அமைத்தல், கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் மூலமான வருவாயை அதிகரித்தல்.

இதையும் படிக்க: “மகளிருக்கு மாதம் ₹2,500!”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்குப் பயன்பாட்டு வரம்புகள் நிர்ணயிப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம். ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட், தமிழகத்தை நிதிச் சரிவிலிருந்து மீட்டு வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us