மேகதாது விவகாரத்தில் அடுத்தடுத்த அதிரடி.. பெங்களூரு செல்கிறார் முதல்வர் விஜய்… உச்ச நீதிமன்ற கதவுகளைத் தட்டவும் திட்டம்!
TN CM Vijay's Karnataka Visit: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நீர் உரிமையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ள தமிழ்நாடு அரசு, ஆகஸ்ட் 3 அன்று கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை, ஜூலை 24: காவிரி ஆற்று நீராசாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் பெங்களூரு சென்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அண கட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், இதற்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. முந்தைய ஆட்சியிலும் சரி, தற்போதைய ‘தமிழக வெற்றி அரசிலும்’ சரி, மேகதாதுவில் தடுப்பணை கட்டக் கூடாது என்றும் அதற்கு எந்தவித அனுமதியும் அளிக்கக் கூடாது என்றும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!
ஒருமனதாக நிறைவேறிய காரசாரத் தீர்மானம்:
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் ஒருமனதாகத் தீர்மானம் கொண்டு வந்தார். மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசின் நீர்வள அமைச்சகமோ, காவிரி மேலாண்மை ஆணையமோ எந்தவொரு தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியையும் வழங்கக் கூடாது எனத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவு அளித்தன.
தண்ணீர் திறக்க முடியாது என பிடிவாதம்:
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில், தமிழ்நாட்டிற்குக் குறிப்பிட்ட அளவிலான தண்ணீரைத் திறந்து விட முடியாது என்பதை கர்நாடக அரசு தொடர்ந்து தனது தீர்க்கமான முடிவாகத் தெரிவித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும், அணைகளில் நீர் தேக்கம் குறைவாக இருப்பதாகவும் காரணங்களைக் கூறித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 3-ல் பெங்களூரு பயணம்:
காவிரி நீர் பிரச்னைக்குச் சுமூகத் தீர்வு காணும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் ஒரு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் (ஆகஸ்ட் 3-ஆம் தேதி) முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்குப் பயணமாகி, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முதலமைச்சர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்.. கோவையில் 3 மாணவிகள் மீது பாய்ந்த டிப்பர் லாரி.. ஒரு மாணவி கொடூர பலி!
உயர் மட்டக் குழுவுடன் ஆலோசனை:
இந்தச் சந்திப்பின் போது, கர்நாடகாவின் நீர் தேவையைப் பாதிக்காத வகையில், தமிழகக் கடைமடை விவசாயிகளின் பாசனத் தேவைகளுக்கான உரியக் காவிரி நீரைப் பெறப் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.