பிளஸ் 2 தேர்வில் கணித பாடத்தில் தோல்வி.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் ஆழ்ந்த பெற்றோர்!
Tiruppur Student Suicide : திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்த மாணவி மன வருத்தத்தில் விஷம் அருந்திய நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு சுவாதி ஸ்ரீ ( வயது 17) என்ற மகள் இருந்தார். இவர், வடுகப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி இருந்தார். இதில், அவர் சில பாடங்களில் சரியாக தேர்வு எழுதவில்லை என்று தெரிகிறது. இதில், மன வருத்தத்தில் இருந்து வந்த சுவாதி தனது பெற்றோரிடம் கூறி வருந்தி வந்தார். இந்த நிலையில் கடந்த, மே 8- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், சுவாதி ஸ்ரீ 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், கணித பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த சுவாதி ஸ்ரீ மேலும் மன வருத்தம் அடைந்தார். அப்போது, தனது பெற்றோரிடம் கணித பாடத்தில் தோல்வி அடைந்தது குறித்து மிகவும் மன வருத்தத்தில் பேசி உள்ளார்.
தேர்வில் தோல்வியால் விபரீத முடிவை எடுத்த மாணவி
அவருக்கு, பெற்றோர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர். மீண்டும் மறு தேர்வு எழுதி வெற்றி பெற்று விடலாம். நிச்சயமாக தேர்ச்சி அடைந்து விடுவாய் என்று நம்பிக்கையும் தெரிவித்திருந்தனர். ஆனால், கணித பாட தேர்வில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து சுவாதி ஸ்ரீ வெளியே வரவில்லை. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி சுவாதி ஸ்ரீ வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்தார். இதில், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு வீட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: பீரோவை உடைக்காமலேயே கொள்ளை.. 103 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் பணத்தை சுருட்டிய மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!




தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த மாணவி
பின்னர், வெளியே சென்றிருந்த ஸ்வாதியின் பெற்றோர் வீடு திரும்பிய நிலையில் தனது மகள் தற்கொலைக்கு முயன்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி தீவிர சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, சுவாதி ஸ்ரீ அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி சுவாதி ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க
இதைத் தொடர்ந்து, மாணவியின் உடல் கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்வில் தோல்வியடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050).
மேலும் படிக்க: புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..