AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பீரோவை உடைக்காமலேயே கொள்ளை.. 103 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் பணத்தை சுருட்டிய மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!

பூங்காவனத்தின் கூச்சல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்துக் கொண்டு இரண்டுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் இருட்டில் தப்பியோடியது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடலூர் போலீசார் வீட்டின் உள்ளே சென்று ஆய்வு நடத்தினர்.

பீரோவை உடைக்காமலேயே கொள்ளை.. 103 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் பணத்தை சுருட்டிய மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 May 2026 08:25 AM IST

கடலூர் மாவட்டம் வடலூரில், அமெரிக்கா சென்றுள்ள ஓய்வு பெற்ற பொது மேலாளர் ஒருவரின் பூட்டிய வீட்டைப் பல நாட்களாக நோட்டமிட்டு, நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் நாகேஷ் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பாசமலர் என்ற மனைவியும், சரவணகுமார் என்ற மகனும் உள்ளனர்.

இதையும் படிக்க: கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி.. உறைந்துபோன பேராசிரியர்கள்.. திருச்சியில் பரபரப்பு!

இவரது மகன் சரவணகுமார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து, தற்போது இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மருமகள் சுகன்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், அவரைக் கவனித்துக் கொள்வதற்காக வேலாயுதம் மற்றும் பாசமலர் தம்பதியினர் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டைப் பராமரித்த உறவினர்:

அவர்கள் அமெரிக்கா செல்லும் முன்பாக, தங்களது வீட்டைத் தினமும் பராமரிக்கும் பொறுப்பை வேலாயுதம் தனது தம்பியின் மனைவியான பூங்காவனம் என்பவரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார். பூங்காவனம் தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளும் இந்த வீட்டிற்கு வந்து, வீட்டைச் சுத்தம் செய்து, விளக்குகளைப் போட்டு கண்காணித்து வந்துள்ளார்.

வீட்டில் திடீர் ஆள் நடமாட்டம்:

சம்பவத்தன்று இரவு சுமார் 8.30 மணி அளவில் பூங்காவனம் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, வேலாயுதத்தின் வீட்டின் முன்பகுதியில் போடப்பட்டிருந்த மின்விளக்கு அணைக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்தார். உடனே சந்தேகமடைந்து வீட்டின் அருகில் சென்று பார்த்தபோது, மெயின் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டின் உள்ளே ஆள் நடமாட்டம் இருப்பதையும் அவர் நேரில் பார்த்துள்ளார். இதனால் பதற்றமடைந்த பூங்காவனம் உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்ததுடன், வடலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

தப்பியோடிய கொள்ளையர்கள்:

பூங்காவனத்தின் கூச்சல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்துக் கொண்டு இரண்டுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் இருட்டில் தப்பியோடியது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடலூர் போலீசார் வீட்டின் உள்ளே சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பீரோவின் சாவி அங்கேயே வைக்கப்பட்டிருந்ததால், கொள்ளையர்கள் பீரோவை உடைக்க வேண்டிய அவசியம் இல்லாமல், சாவியைக் கொண்டே மிக எளிதாக அதனைத் திறந்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை அவர்கள் திருடிக் கொண்டு தப்பியோடியது முதற்கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

போலீசார் தீவிர விசாரணை:

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, இந்த தம்பதியினர் அமெரிக்கா சென்ற விபரத்தை நன்கு அறிந்த நபர்கள், கடந்த பல நாட்களாக இந்த வீட்டைத் தீவிரமாக நோட்டமிட்டு, திட்டமிட்டு இந்தத் துணிகரக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளை நடந்த வீட்டில் சிசிடிவி கேமராக்கள் ஏதும் இல்லாததால், அந்தப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிற சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். தப்பியோடிய மர்மக் கொள்ளையர்களை விரைந்து பிடிப்பதற்காகக் காவல் துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நீலாங்கரை டூ தலைமைச் செயலகம்.. 17 கிலோமீட்டர்… 400 போலீசார்… முதல்வர் விஜய்யின் ‘பவர்ஃபுல்’ கான்வாய் பயணம்!

Follow Us